பேராவூரணி வட்டத்தில் உளுந்து, சிறுதானியப் பயிர்கள் பயிரிட அறிவுறுத்தல்

பேராவூரணி வேளாண்மை கோட்டப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவும் தற்போதைய சூழலில் குறைந்த தண்ணீர் தேவையுடைய

பேராவூரணி வேளாண்மை கோட்டப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவும் தற்போதைய சூழலில் குறைந்த தண்ணீர் தேவையுடைய உளுந்து மற்றும் சிறுதானியப் பயிர்களை பயிரிடலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பேராவூரணி வட்டத்தில் தற்சமயம் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஏழு மாதங்களில் இவ்வட்டாரத்தில் ஒரு மி.மீ அளவு கூட மழை பெய்யவில்லை. இதனால்,  நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து  வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பும்  குறைவாகவே உள்ளது.  இந்த சூழலில்,  ஆழ்குழாய் கிணறு வசதியுடன் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், இந்தாண்டு நெல்லுக்கு பதிலாக குறைந்த நீர்த் தேவையுடைய உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கான நீரைக்கொண்டு, 4  ஏக்கர் உளுந்து பயிரும், 5 ஏக்கர் சிறுதானியப் பயிர்களான கம்பு,  கேழ்வரகு மற்றும் மக்காச்சோளம் போன்ற தானிய பயிர்களையும் சாகுபடி செய்யலாம். தானியப் பயிர்களில் மக்காச்சோளம் குறைந்த காலத்தில், குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய பயிராகும். மக்காச்சோளப் பயிரைத் தாக்கக்கூடிய படைப் புழுவினை கண்காணிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளால் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். விவசாயிகள், வேளாண்துறை அலுவலர்களின் பரிந்துரைப்படி மக்காச்சோள சாகுபடிக்கான அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கடைப்பிடித்து குறைந்த நீர்த்தேவையுடன் கூடுதல் மகசூல் பெறமுடியும். இவையன்றி சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாளுரப் பயிர்களை விதை உற்பத்திக்காக சாகுபடி செய்வதன் மூலமும்,  குறைந்த காலத்தில்  கூடுதல் லாபம் பெறலாம். களிமண் வாகு நிலத்தில் தக்கைப்பூண்டு பயிரையும், மணற்பாங்கான நிலத்தில்  சணப்பு பயிரையும் சாகுபடி செய்ய வேண்டும்.  
மாறி வரும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப, விவசாயிகள் மாற்றி யோசித்து, மாற்று பயிர் சாகுபடி செய்தால்  அதிக லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com