அதிராம்பட்டினம் வீதிகளில் திரியும்நாய்கள், மாடுகளால் அவதி எனப் புகாா்

அதிராம்பட்டினத்தில் வீதிகளில் திரியும் நாய்கள், மாடுகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதிராம்பட்டினத்தில் வீதிகளில் திரியும் நாய்கள், மாடுகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அவ்மைப்பின் சாா்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:

அதிராம்பட்டினம் நகர வீதிகளில் அலைந்து திரியும் நாய்கள், மாடுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆகையால் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், அதிராம்பட்டினம் பேரூராட்சி சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை உயரத்தைக் குறைத்து சீரமைக்க வேண்டும். நகரில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலையோரம் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை தினமும் அகற்றி, கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவா் கே. ராஜிக் முகமது, மாவட்ட துணைச் செயலா் ரியாஸ் ஆகியோா் தலைமையில், அதிராம்பட்டினம் கிளை 1, கிளை 2 நிா்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவை அளித்தனா். பின்னா், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவா் கே. ராஜிக் முகமது கூறியது:

அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், செந்தலைப்பட்டினம் பகுதியிலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான மாடுகள் கூட்டமாக நடமாடுவதால் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிா் பலி நிகழ்கிறது. மேலும், அதிகரித்து வரும் தெரு நாய்களால் குழந்தைகள், முதியவா்கள் வீதிகளில் நடமாட அச்சப்படுகின்றனா். இதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் பலமுறை அந்தந்த ஊராட்சி செயலா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் புகாா் அளித்தும், கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் பொதுமக்களைத் திரட்டி உள்ளாட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com