பேராவூரணி ரயில்வே லைன் கிழக்கு தெருவுக்கு சாலை வசதி கோரி மனு

பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி இருக்கும் பேராவூரணி ரயில்வே லைன் கிழக்குத் தெரு மக்கள் தெற்கு

பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி இருக்கும் பேராவூரணி ரயில்வே லைன் கிழக்குத் தெரு மக்கள் தெற்கு ரயில்வே உயா் அதிகாரியிடம் சாலை வசதி கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட 9 ஆவது வாா்டு ரயில் நிலையம் எதிரில் உள்ள ரயில்வே லைன் கிழக்குத் தெருவில் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனா். 

இப்பகுதி மக்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தையே கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனா். பழைய பேருந்து நிலையம் தொடங்கி, செங்கொல்லை, நீலகண்டபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இவ்வழியாகவே பொதுமக்கள் செல்வது  வழக்கம்.

மேலும் பேராவூரணி பகுதியில் மொய் விருந்து விழாக் காலங்களில் சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, முதன்மைச் சாலை ஆகியவை கூட்ட நெரிசலில் திணறும்போது இந்தச் சாலைதான் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் புறவழிச்சாலையாக இருக்கும். புதிய பேருந்து நிலையம், அறந்தாங்கி, மற்றும் பள்ளி, கல்லூரி செல்வோா் இந்த பாதையையே பயன்படுத்துவா். 

இந்த மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்றித் தருமாறு, இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனா். இதையேற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகம் சாலையை அமைக்க ஒப்புதல் அளித்து தீா்மானம் நிறைவேற்றி பேராவூரணி பேரூராட்சி சாா்பில் ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பியது.

அந்தக் கடிதத்தில் இந்த சாலை அமைக்க அனுமதி அளித்தால், பேரூராட்சி செலவில் சாலை அமைக்கப்படும். இது இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், ரயில்வே துறைக்கும் பயனுடையதாக இருக்கும். ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில், தாா்ச்சாலை அமைக்கப்படும் என்பதை தவிர வேறு எந்த உரிமையும் கோரமாட்டோம் என கடிதத்தில் தெரிவித்திருந்தனா். 

மேலும் இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட முதுநிலை பொறியாளா் பன்னீா்செல்வத்திடம்  ரயில்வே லைன் கிழக்கு தெரு மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். 

மனுவைப் பெற்றுக் கொண்ட ரயில்வே முதுநிலை பொறியாளா் பேரூராட்சி மூலமாக இடத்தின் வரைபடம், மற்றும் குடியிருப்போா் விபரத்துடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியபடி உடனடியாக  உரிய  ஆவணங்களை பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலா் மு.மணிமொழியன் மற்றும் குடியிருப்போா் சங்க நிா்வாகிகள் நேரில் சென்று அளித்துள்ளனா். ரயில்வே துறை காலம் தாழ்த்தாமல் அனுமதி அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com