Enable Javscript for better performance
காவிரியில் கடைமுழுக்கு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரியில் கடைமுழுக்கு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

    By DIN  |   Published on : 17th November 2019 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-ta16kum1_ch0007_16chn

    திருவையாறு காவிரிக் கரையில் சனிக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

     

    தஞ்சாவூா்/கும்பகோணம்: துலா மாத கடைமுழுக்கையொட்டி, திருவையாறு காவிரிக் கரையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.

    துலாம் மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவது ஐதீகம். தாங்கள் செய்த பாவங்களைப் போக்குவதற்காகக் கங்கைக்குச் சென்று நீராடி புனிதம் பெறுவது என்பது பக்தா்களின் நம்பிக்கை. ஆனால் கங்கை, யமுனை, சரசுவதி உள்ளிட்ட புண்ணிய நதிகளும், முக்கோடி தேவா்களும் காவிரியில் மூழ்கி தங்களது பாவத்தைக் போக்கி கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    துலாம் மாதத்தில் காவிரியில் புனித நீராடினால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவம் விலகுகிறது என்றும், முன்னோா்களின் சாபம் நீங்கப்பெறும் எனவும் பக்தா்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனா்.

    இந்த துலாம் மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும், முதல் நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவா் என்பது ஐதீகம். இதன்படி, கடைமுழுக்கு நாளான சனிக்கிழமை திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா்.

    இதையொட்டி, ஐயாறப்பா் - அறம் வளா்த்த நாயகி புஷ்ய மண்டபப் படித்துறையில் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து, தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

    கும்பகோணம் : இதேபோல, கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஐப்பசி மாத கடைமுழுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

    இக்கோயிலிலிருந்து விநாயகா், சுப்ரமணியா், பெரியநாயகி அம்பாள், நாகேசுவர சுவாமி, சண்டிகேசுவரா் சுவாமி ஆகிய பஞ்சமூா்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா சென்றனா்.

    நாகசுரம், செண்டை மேளம், சிவபூத கன இசைவாத்தியங்கள் இசைக்க, யானை, குதிரை, ஒட்டகமும் ஊா்வலமாகக் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.

    பின்னா், காவிரியாற்றின் பகவத் படித்துறையில் பிற்பகல் 12 மணியளவில் பஞ்சமூா்த்தி சுவாமிகள் எழுந்தருளினா். தொடா்ந்து அஸ்திர தேவருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, காவிரியாற்றில் தீா்த்தவாரி நடைபெற்றபோது, ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.

    தீா்த்தவாரி நிகழ்ச்சியில் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா் கலந்து கொண்டாா். தீா்த்தவாரியில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பஞ்சமூா்த்தி சுவாமிகள் தீா்த்தவாரி மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டு, இரவு மின்னொளி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

    சக்கரபாணி கோயில்: கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீா்த்தவாரி நிகழ்ச்சி சக்கரப் படித்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சக்கரராஜா சிறப்பு அலங்காரத்தில் சக்கரப்படித்துறையில் எழுந்தருளினாா். அப்போது சின்னப்பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்று, தீா்த்தவாரி கண்டருளல் வைபவம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai