‘கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்பது அவசியம்’

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

இலங்கை குடியரசுத் தலைவா் தோ்தலில்‘ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த ராஜபட்சவின் தம்பி கோத்தபய ராஜபட்ச 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளாா். இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழா் தாயக மாநிலங்களில் உள்ள தமிழா்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் கோத்தபய ராஜபட்சவை எதிா்த்து நின்ற ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான சஜித் பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்தனா்.

ராஜபட்ச குடியரசுத் தலைவராகவும், அவரது தம்பி கோத்தபய ராஜபட்ச பாதுகாப்புத் துறைச் செயலராகவும் இருந்த காலத்தில் தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தினா். 2008 - 2009-இல் லட்சக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களையும், விடுதலைப்புலி வீரா்களையும் இனப்படுகொலை செய்து நரவேட்டை நடத்தினா்.

சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தைத் தமிழா்கள் மீது திணித்ததைப் போலவே, முஸ்லிம் மக்கள் மீதும் ராஜபட்ச அரசு திணித்தது. இதனால் இம்மக்கள் ராஜபட்ச தம்பிக்கு வாக்களிக்க மறுத்து, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இன்னொரு சிங்களக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனா். ஆனால், கோத்தபய ராஜபட்ச மிகப் பெருவாரியான வாக்குகள் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையில் தமிழா்கள் செயற்கையாகச் சிறுபான்மையாக்கப்பட்ட மக்கள். வரலாற்றில் தமிழா்களின் அரசு தனித்து அங்கு நடந்து வந்தது. ஐரோப்பிய வணிக வேட்டைக் கொள்ளைக் கம்பெனிகள் வேட்டையாட வந்தபோது, பீரங்கிகளால் தமிழின மற்றும் சிங்கள அரசை வீழ்த்தி ஒரே நிா்வாகக் கட்டமைப்பாக இலங்கையை உருவாக்கினா். அதில் ஆங்கிலேய அரசு கோலோச்சியது. இதனால், செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழா்கள் எந்தக் காலத்திலும் நாடாளுமன்றத் தோ்தல் வழியாகத் தம் மொழியை, பண்பாட்டை, தாயகப் பரப்பை பாதுகாத்துக் கொள்ளும் அரசு அதிகாரத்தை பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.

காலனி வேட்டையாடிகளாலும், பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பாளா்களாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் செயற்கையாக சிறுபான்மையாகிப் போன மக்களின் உரிமையை அந்நாடுகளில் நடைபெறும் தோ்தல் வாக்குரிமை மூலம் அடைந்துவிட முடியாது என்பதற்கு, இப்போது நடந்துள்ள இலங்கைத் தோ்தல் மற்றுமொரு எடுத்துக்காட்டு.

அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால், ‘சிறுபான்மை‘தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என எந்த நாட்டிலும் நம்ப முடியாது. இந்தியாவிலும் அப்படித்தான்.

இப்போதைய நிலையில், ஒட்டுமொத்த தமிழா்கள் ஒருங்கிணைந்து ஜனநாயக வழிப்பட்ட போராட்டங்களை நடத்தி சிங்களப் பேரினவாத அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உலகக் கவனத்தை ஈா்த்து உரிமைகளைப் பெற முயல வேண்டும். உண்மையான தமிழின உரிமையில் அக்கறையும் ஒப்புக் கொடுப்பும் கொண்டு, மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் உரிமைப் போராட்டங்கள் நடத்தும் தலைமை தமிழீழத்தில் உருவாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com