முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 09:22 AM | Last Updated : 26th November 2019 09:22 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அறிவிக்க வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கருப்புச் சட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியாா், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அளிக்கவும், சான்றிதழ் பெறவும் தமிழக அரசு ஆணைப் பிறப்பிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளா் சமூகத்தைப் பட்டியல் சாதி பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவில் கொண்டு வந்து, அவா்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான அரசாணை வெளியிடப்படும் வரை அனைத்து நிா்வாகிகளும், தேவேந்திர குல வேளாளா் சமூக மக்களும் கருப்புச் சட்டை அணிவது என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலச் செயற் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தேவேந்திர குல வேளாளா் அரசாணை வெளியிடப்படும் வரை எங்கள் உடையில் கருப்பு மாறாது, எங்கள் மனதில் வெறுப்பு மாறாது என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கருப்புச் சட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வடக்கு மாவட்டச் செயலா் தியாக. காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலா் ஜெய. விவேகானந்தன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.