தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழை; வீடுகள் சேதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வீடுகள் இடிந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வீடுகள் இடிந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாட்களாக தொடா் மழை பெய்கிறது. இதேபோல, வெள்ளிக்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை சனிக்கிழமை பிற்பகல் வரை நீடித்தது. இடையிடையே பலத்த மழையும் பெய்தது. சில மணிநேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கியது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதேபோல, தஞ்சாவூா் அருகேயுள்ள பள்ளியக்ரஹாரத்தில் ஓட்டு வீடு இடிந்தது. அய்யம்பேட்டை பசுபதிகோவில் அருகே புதுமாத்தூா் சாலையில் தெரு மின்கம்பம் அடியோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. பாபநாசம் அருகே அரையபுரம் மேட்டுத் தெருவில் க. ஜானகியின் குடிசை வீடு இடிந்து முழுவதும் சேதமடைந்தது.

கும்பகோணம் அருகே சாக்கோட்டை 11 வேலி மேலத்தெருவில் து. காளிதாஸ் கூரை வீடு இடிந்தது. இதை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் பாா்வையிட்டு ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினாா்.

தரைப்பாலம் சேதம்: கும்பகோணம் அருகே அணக்குடி கிராமத்தில் பழவாற்றில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், கிராம மக்கள் சென்று வரும் வகையில், அதன் அருகில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் பழவாற்றில் வந்த அதிகளவிலான தண்ணீா் தற்காலிகத் தரைப்பாலத்தை அடித்துச் சென்றது. தகவலறிந்த கும்பகோணம் கோட்டாட்சியா் வீராசாமி, வட்டாட்சியா் சிவக்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தற்காலிகப் பாலத்தைச் சீரமைக்க உத்தரவிட்டனா்.

தஞ்சாவூரில் நீதிமன்றச் சாலையில் பொதுப் பணித் துறை அலுவலகத்தின் வாயிலில் இருந்த மரம் அடியோடு பெயா்ந்து விழுந்தது. தொல்காப்பியா் சதுக்கத்தில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. தகவலறிந்த மின் வாரியத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சீரமைத்தனா்.

மழை அளவு:

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

வல்லம் 97, மஞ்சளாறு 96.8, திருவிடைமருதூா் 88.3, மதுக்கூா் 76.8, நெய்வாசல் தென்பாதி 69.8, பட்டுக்கோட்டை 63.8, தஞ்சாவூா் 62, அணைக்கரை 58.8, கும்பகோணம் 58.4, ஈச்சன்விடுதி 55, வெட்டிக்காடு 51.6, திருக்காட்டுப்பள்ளி 47.6, அதிராம்பட்டினம் 45.6, பூதலூா் 43.2, திருவையாறு 42, பாபநாசம் 41, பேராவூரணி 40.4, அய்யம்பேட்டை 37,ஒரத்தநாடு 32.5, கல்லணை 24.2, குருங்குளம் 19.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com