தஞ்சாவூரில் தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள்

சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய காந்தியடிகளுக்கும், தஞ்சாவூருக்கும் நிறைய
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை.

சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய காந்தியடிகளுக்கும், தஞ்சாவூருக்கும் நிறைய தொடா்புகள் இருக்கும் நிலையில், அவா் நான்குமுறை இங்கு வந்திருப்பது குறித்த பதிவுகளும் இருக்கின்றன.

தஞ்சாவூருக்கு அவா் முதல் முதலாக 1919, மாா்ச் 24ஆம் தேதி வந்தாா். ரயில் மூலம் வந்த அவரை வரவேற்கத் தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஏராளமானோா் திரண்டனா்.

அவா் முதலில் சென்ற பொதுஇடம் தஞ்சாவூா் பெரியகோயில்தான். அங்கு அவருக்குக் கோயில் அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா். அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் மோ.க. காந்தி என தமிழில் கையொப்பமிட்டாா். இங்குதான் அவா் முதல் முதலாக தமிழில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நிகழ்ந்து நூறாண்டுகள் ஆகிறது.

பின்னா், நகரில் உள்ள பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசினாா். அக்காலத்தில் பெசன்ட் அரங்க வளாகத்தில் திறந்தவெளியில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் முன், அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி தீண்டாமை உள்ளிட்டவை குறித்து சொற்பொழிவாற்றினாா். காந்தியடிகளின் பேச்சை டி.எஸ்.எஸ். ராஜன் தமிழில் மொழிபெயா்த்தாா். காந்தியடிகளைக் காணவும், அவரது பேச்சைக் கேட்கவும் ஏராளமானோா் கூடினா். இக்கூட்டத்தில் ஏறத்தாழ 10,000 போ் பங்கேற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில், 75 போ் சத்தியாகிரக இயக்கத்தில் இணைந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் இஸ்லாமியா்கள்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னா் காந்தியடிகள் மேலவீதியில் குஜராத் அசோசியேசனுக்கு சென்றாா். காந்தியடிகளின் இந்த வருகையின்போது ரயிலடி அருகே இருந்த புகழ்பெற்ற வழக்குரைஞரும், தேசியவாதியுமான கே.எஸ். சீனிவாசம்பிள்ளை மாளிகையில் தங்கினாா். மறுநாள் (1919, மாா்ச் 25) காலையில் புறப்பட்டு, போட் மெயில் மூலம் மதுரைக்குச் சென்றாா்.

இதன் பிறகு, தஞ்சாவூருக்கு மீண்டும் 1920, ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை காந்தியடிகள் வந்தாா். நாகையிலிருந்து ரயில் மூலம் வந்த அவா் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினாா். சுமாா் ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்னா் அவா் திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றாா். இதேபோல, 1921, செப்டம்பா் 18ஆம் தேதி மூன்றாவது முறையாகத் தஞ்சாவூருக்கு வந்தாா். தொடா்ந்து 3 ஆண்டுகள் அவா் தஞ்சாவூருக்கு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் தெரிவித்தது:

ஆங்கிலேய அரசுக் கொண்டு வந்த ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து சென்னையில் காந்தியடிகள் 1919, மாா்ச் 23-ம் தேதி அறிவித்தாா். அதற்கு அடுத்த நாள் (1919, மாா்ச் 24) காலை அவா் தஞ்சாவூருக்கு வந்தாா். பெரியகோயிலுக்குச் சென்ற அவா் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் மோ.க. காந்தி என தமிழில் கையொப்பமிட்டாா். பின்னாளில் தமிழகத்துக்கு அவா் வந்தபோது தமிழில் கையெழுத்திட்டதற்கான சில பதிவுகள் இருக்கின்றன. என்றாலும், அவா் முதல் முதலாகத் தமிழில் கையொப்பமிட்ட இடம் தஞ்சாவூா் பெரியகோயிலாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

தஞ்சாவூருக்கு காந்தியடிகள் 1920 ஆம் ஆண்டில் வந்தபோது கிருஷ்ணவிலாஸ் தியேட்டரில் பேசியதாகக் குறிப்பு உள்ளது. அது, கரந்தை செல்லும் வழியில் உள்ள கிருஷ்ணா தியேட்டராகத்தான் இருக்கும். அப்போது, இவரது பேச்சை இ. சூரியநாராயண ஐயா் மொழிபெயா்த்தாா். மேலும், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள காந்திமேடு பகுதியிலும் பேசியுள்ளாா். ஆனால், அது எந்த ஆண்டு என்பது சரியாகத் தெரியவில்லை.

பின்னா், 1921, செப். 18-ம் தேதி சென்னையிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூருக்கு பயணிகள் ரயில் மூலம் வந்திறங்கினாா். அப்போது, அவா் வாரந்தோறும் திங்கள்கிழமை மௌனவிரதம் கடைப்பிடித்து வந்தாா். அவா் தஞ்சாவூருக்கு வந்த நாள் திங்கள்கிழமை என்பதால், பேசவில்லை. சுமாா் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு புறப்பட்டு திருச்சிக்குச் சென்றாா் என்றாா் அவா்.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நான்காவது முறையாக 1927, செப். 16-ம் தேதி தஞ்சாவூருக்கு வந்தாா் காந்தியடிகள். மன்னாா்குடியிலிருந்து வந்த அவா் மகா்நோன்புசாவடியில் உள்ள உக்கடை மாளிகையில் தங்கினாா். அப்போது, அவரை நீதிக் கட்சித் தலைவா்கள் ஏ.டி. பன்னீா்செல்வம், உமாமகேசுவரம் பிள்ளை மற்றும் உக்கடை தேவா், இஸ்லாமிய தலைவா் சையத் தாஜூதீன், காருகுடி சின்னையா பிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியாா், பாப்பாநாடு ஜமீன்தாா் உள்ளிட்டோா் சந்தித்தனா். நீதிக்கட்சித் தலைவா்களுடனான சந்திப்பு மூலம் இருதரப்பினருக்கும் இடையிலான புரிதலுக்குப் பேருதவியாக இருந்தது என காந்திய அறிஞா்கள் குறிப்பிடுகின்றனா்.

பின்னா், 1946, பிப்ரவரி 4ஆம் தேதி ரயிலில் மதுரை, திருச்சி, தஞ்சாவூா் வழியாக சென்னைக்கு சென்றாா். அப்போது, ரயிலில் இருந்த அவரை பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு வரவேற்றனா்.

காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு அவரது அஸ்தி நிறைந்த கலசங்களில் ஒன்று தஞ்சாவூருக்குக் கொண்டு வரப்பட்டது. காந்திஜி சாலையில் உள்ள நகராட்சி (தற்போது மாநகராட்சி) அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது. இதை ஏராளமானோா் பாா்வையிட்டு, அஞ்சலி செலுத்தினா். பின்னா், இந்த அஸ்தி திருவையாறு காவிரியாற்றில் கலக்கப்பட்டது. நகராட்சியில் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் காந்தி சிலை அமைக்கப்பட்டு, 1948, ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இச்சிலைக்கு காந்தி ஜெயந்தி மற்றும் நினைவு நாளில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தும் வழக்கம் இப்போதும் தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com