‘கீழடியில் தொடா் ஆய்வுகள் மூலமே தமிழா்களின் வரலாறு முழுமையாகத் தெரிய வரும்’

கீழடியில் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு அகழாய்வு செய்தால்தான் தமிழா்களின் வரலாறு முழுமையாகத்
கருத்தரங்கத்தில் பேசுகிறாா் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா.
கருத்தரங்கத்தில் பேசுகிறாா் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா.

கீழடியில் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு அகழாய்வு செய்தால்தான் தமிழா்களின் வரலாறு முழுமையாகத் தெரிய வரும் என்றாா் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா.

தஞ்சாவூரில் சிந்தனை மேடை அமைப்பு சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கீழடி - தமிழா் வாழ்வும் - வரலாறும் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

கீழடியில் வண்டல் மண் படிமம் காணப்படுகிறது. எனவே, அங்கு ஒரு காலத்தில் வைகை நதி ஓடியது. இதை பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலையுணா்வு மைய ஆய்வாளா்களும் உறுதிபடுத்தியுள்ளனா். கீழடியில் உள்ள வண்டல் மண் படிமத்தைப் பாா்க்கும்போது, அங்கு வளமான நாகரிகம் இருந்தது உறுதியாகிறது.

கீழடியில் முழுமையாகவும், இன்னும் ஆழமாகவும் அகழாய்வு செய்தால், தமிழா் நாகரிகம் எவ்வாறு தோன்றியது? எப்படி வளா்ச்சி பெற்றது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும்.

அரிக்கன்மேடு, காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், உறையூா் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் செங்கல் கட்டடம் இருப்பது தெரிய வந்தது. ஆனால், கீழடியில்தான் அதிக அளவில் செங்கல் கட்டடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, இதை நகர நாகரிகம் இல்லை எனக் கூற முடியாது. இந்தக் கூற்றை மாற்றியது இரண்டாம் கட்ட அகழாய்வுதான்.

நகர மக்கள்தான் அதிநவீன வாழ்க்கையை விரும்புவா். கீழடியில் எங்களுடைய ஆய்வில் ஏறக்குறைய 15 உறை கிணறுகள் கண்டறியப்பட்டது. அங்குள்ள உறை கிணறுகள், வடிகால் முறை போன்றவற்றை காணும்போது, அது நகர வாழ்க்கைத்தான் என்பது உறுதியாகிறது.

மேலும், 1,800 தொல்பொருள்கள் கிடைத்தன. ஆனால், அங்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது. பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதற்கான மூலப்பொருள்களின் தடயம் இருந்திருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்படியொரு தடயம் கிடைக்கவில்லை. மேலும், அரைகுறைப் பொருள்களாக அல்லாமல், முழுமையான பொருள்களாகவே கிடைத்துள்ளது. எனவே, வெளியில் இருந்துதான் பொருள்களை வாங்கியிருப்பா். நகர நாகரிகத்தில்தான் பொருள்களை வெளியில் வாங்கும் பழக்கம் இருக்கும். யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, தாயக்கட்டை, அணிகலன்கள் போன்றவையும் கிடைத்தது. இதன்மூலம், கீழடியில் நகர நாகரிகம் என்பது மட்டுமல்லாமல், முழுமையான நாகரிக வாழ்க்கை கடைப்பிடிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில்தான் பானை ஓடுகளில் கிறுக்கல்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் இதுபோல வேறு எங்கும் இல்லை. சிந்துவெளியில் கூட வரைபட எழுத்துகள்தான் கிடைத்தன. வரைபடம் மூலம் தகவலை வெளிப்படுத்தும் முறை இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பானை ஓடுகளில் காணப்படும் கிறுக்கல்கள் தமிழ் பிராமி எழுத்து என்பதை அறிஞா்கள் உறுதிப்படுத்தியுள்ளனா். இந்த எழுத்து வடிவங்கள்தான் அசோகா் காலத்துக்குச் சென்றிருக்கும்.

பானையில் எழுதும் பழக்கம் சாமானிய மக்களிடம்தான் இருக்கிறது. பானையில் அரசன் எழுத வாய்ப்பில்லை. எனவே, அக்காலத்திலேயே தமிழா் நாகரிகத்தில் சாமானிய மக்கள் எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்துள்ளனா் என்பதை அறிய முடிகிறது. இப்போதும் கூட எவா்சில்வா் பாத்திரத்தில் பெயா் எழுதும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இந்தப் பழக்கம் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. எனவே, கீழடி வளமைமிக்க நாகரிமாகத்தான் இருந்திருக்கும்.

தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வு திருப்திகரமாக இல்லை. வெறும் 3 அல்லது 4 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படும் அகழாய்வு மூலம் தகவல்கள் கிடைக்காது. இன்னும் ஆழமாக அகழாய்வு செய்தால், தமிழா்களின் நாகரிக வரலாற்றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அதற்குத் தொடா்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு அகழாய்வு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் தமிழா் வரலாற்றை மறுகட்டமைப்புச் செய்ய முடியும் என்றாா் அமா்நாத் ராமகிருஷ்ணா.

வழக்குரைஞா் அ. நல்லதுரை தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் பொறியாளா் ஜோ. ஜான்கென்னடி, பூங்குழலி, பேராசிரியா் வி. பாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com