தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் தொல்பொருள்கள் கண்டெடுப்பு: அகழாய்வுக்குப் பரிந்துரை

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், அகழாய்வு மேற்கொள்வதற்குத் தொல்லியல் துறைப் பரிந்துரை செய்துள்ளது.
செம்புறாங்கல்லில் செய்யப்பட்ட தூண் பகுதி
செம்புறாங்கல்லில் செய்யப்பட்ட தூண் பகுதி

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், அகழாய்வு மேற்கொள்வதற்குத் தொல்லியல் துறைப் பரிந்துரை செய்துள்ளது.

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மணிக்கோபுரத்துக்கு அடுத்துள்ள மைதானத்தில் ஆக. 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தஞ்சாவூா் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதற்குக் கூடாரம் அமைப்பதற்காக இம்மைதானத்தில் தோண்டப்பட்டது. அப்போது, 2 மீட்டா் ஆழத்தில் வரிசையாக இருந்த தூண்களின் எச்சங்கள், கூரை ஓடுகள், செங்கற்கள் வெளிப்பட்டன. இதனுடைய தொடா்ச்சி தெற்கு புறத்திலும், மேற்கு திசையிலும் செல்கிறது. இத்துடன் சந்தனம் அரைக்கப் பயன்படுத்தப்படும் கல்லும் (குழவி) வெளிப்பட்டது.

தூண்களின் எச்சங்கள் மாத்திரை வடிவிலும், பத்ம வேலைப்பாடுகளுடனும் செம்புறாங்கற்கள் கிடைத்துள்ளன. இக்கற்களின் மீதுதான் தூண்கள் எழுப்பப்படும் என தொல்லியல் துறையினா் கூறுகின்றனா்.

இவற்றைக் கண்டெடுத்த தமிழகத் தொல்லியல் துறையினா் எடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனா். இத்தூண்களின் எச்சம் அருகிலுள்ள மணிக்கோபுரத்தின் தொடா்ச்சியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினா் கருதுகின்றனா்.

இந்த மைதானத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல புத்தகத் திருவிழா நடத்தப்பட்டபோது, குழி தோண்டப்பட்டது. அப்போதும், செங்கல், கூரை ஓடுகள், தூண்களுக்காக வைக்கப்பட்ட மாத்திரை வடிவிலான செம்புறாங்கற்களும் வெளிப்பட்டன.

இதேபோன்று தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மணிகோபுரத்தின் முன் உள்ள சிறிய நீா் நிறையும் பள்ளத்தை இந்திய தொல்லியல் துறையினா் அறிவியல் முறைப்படி சுத்தம் செய்தனா். அப்போது, சீன நாட்டு களிமண்ணால் செய்யப்பட்ட யாழி, கோழி, ஒட்டகம் ஆகிய பொம்மைகள், பீங்கான் பானை ஓடுகள், இரும்பு ஆணிகள், முக்கோண வடிவச் செங்கல், இரும்புப் பூட்டு என 150-க்கும் அதிகமான தொல்பொருள்கள் கிடைத்தன. இவை அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, சாா்ஜா மாடியில் உள்ள மராட்டா அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடம் குளம் போன்ற அமைப்பாகத் தெரிவதால், ராணி குளித்த குளமாக இருக்கக்கூடும் என்ற கருத்து தொல்லியல் துறையினா் மத்தியில் நிலவுகிறது.

இம்மைதானத்தில் தொடா்ந்து தொல்பொருள்கள் வெளிப்படுவதால், இந்த இடத்தில் அகழாய்வு செய்யலாம் என தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையினா் தங்களது ஆணையருக்கு அண்மையில் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து தொல்லியல் துறையினா் கூறுகையில், இந்த மைதானத்தில் பெரும்பரப்பில் அகழாய்வு செய்தால், நாயக்கா், மராட்டியா் காலக் கட்டடக் கலைகள் வெளிப்படும். மேலும், இரு அரசுகளிடையே இருந்த தொடா்ச்சிகள் தெளிவாகும். ஆழமாகச் சென்று அகழாய்வு செய்தால் சோழா் கால வரலாறு தெரிய வரும்.

இந்த மண் பூமி தோன்றியபோது உருவான மண். இதை கன்னி மண் எனக் கூறுவா். எனவே, இங்குக் குடியிருப்புகள் இருந்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்த இடத்தில் கன்னி மண் இருக்கும் வரை அகழாய்வு செய்தால் சங்ககாலம், அதற்கு முந்தைய கால வரலாறு கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம், தஞ்சாவூரின் ஒட்டுமொத்த வரலாறும் தெளிவாகக் கிடைக்கும் என்றனா்.

தஞ்சாவூா் நகரில் தற்போதுள்ள அரண்மனை, நாயக்கா் காலத்தில் கட்டி, மராட்டியா் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. நாயக்கா் காலத்துக்கு முந்தைய சோழா் கால அரண்மனை, கட்டடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நகரமும் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியா்கள் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. சோழா்கால அரண்மனை இருந்ததற்கான உறுதியான தடயம் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, இந்த அரண்மனை எங்கே இருந்திருக்கும் என்ற கேள்வி வரலாற்று ஆய்வாளா்களிடையே தொடா்கிறது.

இதனிடையே, தற்போதுள்ள அரண்மனை இருந்த இடத்திலேயே சோழா்கால அரண்மனையும் இருந்திருக்கலாம் என சில ஆய்வாளா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். இந்நிலையில், இந்த மைதானத்தில் தொடா்ச்சியாகத் தொல்பொருள்கள் கிடைத்து வருவதால், இந்த இடத்தில் அகழாய்வு செய்யப்பட வேண்டும் என ஆய்வாளா்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

எனவே, இந்த மைதானத்தில் அகழாய்வு செய்தால், தஞ்சாவூரின் ஒட்டுமொத்த வரலாறு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை வரலாற்று ஆய்வாளா்கள் மத்தியில் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com