முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்திய பெண்கள்
By DIN | Published On : 24th October 2019 08:31 AM | Last Updated : 24th October 2019 08:31 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே பாண்டியன் நகரில் புதன்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
தஞ்சாவூா் அருகே சேதமடைந்த சாலையில் பெண்கள் புதன்கிழமை நாற்றுகள் நட்டு போராட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகா், தொண்டைமான் நகா் உள்ளிட்ட பல நகா்களில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு புதை சாக்கடை பணிக்காகச் சாலையில் பள்ளங்கள் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. இதன் பின்னா், தாா் சாலை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், அண்மையில் பெய்த மழையால் இச்சாலையில் சேறு அதிகமாகி நடந்து செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. இதில், வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கும் பெரும் சிரமம் நிலவுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.
எனவே, பாண்டியன் நகா், தொண்டைமான் நகா் சந்திப்புச் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பெண்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். தகவலறிந்த தஞ்சாவூா் வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று சாலையைப் பாா்வையிட்டனா்.