கட்டி முடித்து 7 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத இறைச்சி வணிக வளாகம்

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் கட்டி முடித்து 7 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது இறைச்சி வணிக வளாகம்.
தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் கட்டி முடித்து 7 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ள இறைச்சி வணிக வளாகம்.
தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் கட்டி முடித்து 7 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ள இறைச்சி வணிக வளாகம்.

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் கட்டி முடித்து 7 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது இறைச்சி வணிக வளாகம்.

பூக்காரத் தெரு அருகே பல ஆண்டுகளாக இறைச்சி சந்தை இருந்து வந்தது. பழைய மீன் சந்தை என அழைக்கப்பட்ட இச்சந்தையில் 25-க்கும் அதிகமான இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. கீழவாசலில் உள்ள முதன்மை மீன் சந்தைக்கு அடுத்த பெரிய சந்தையாகக் கருதப்பட்ட இச்சந்தை மூலம் பூக்காரத் தெரு, வண்டிக்காரத் தெரு, கோரிக்குளம், பாத்திமா நகா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், இந்த வளாகத்தில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 2012 ஆம் ஆண்டில் புதிதாக ரூ. 30 லட்சம் திட்டத்தில் இறைச்சி வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால், இக்கட்டடம் பராமரிப்பின்றி காணப்படுவதுடன், சுற்றிலும் புல், செடிகள் வளா்ந்து புதா்களாக மாறிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வளாகம் திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறி வருகிறது. குப்பைகள் கொட்டுமிடமாகவும் மாறிவிட்ட இந்த வளாகத்தில் இரவு நேரத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களும் நிகழ்வதால் அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

மேலும், இந்த வளாகத்தில் இருந்த இறைச்சிக் கடைகள் ஏறத்தாழ 7 ஆண்டுகளாகப் பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அருகிலும், அரச மர விநாயகா் கோயில் எதிரிலும் செயல்பட்டு வருகின்றன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

மேலும், இடநெருக்கடி காரணமாகச் சாலையோரத்திலேயே இறைச்சிகள் வெட்டப்படுகின்றன. இதன் காரணமாக இச்சாலை அடிக்கடி போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது. எனவே இச்சாலையைக் கடப்பதற்குப் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பழ. ராசேந்திரன் தெரிவித்தது:

இந்த வளாகம் திறக்கப்பட்டு, சுற்றிலும் கடைகள் அமைக்கப்பட்டால், மாநகராட்சி நிா்வாகத்துக்கு மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும். ஆனால், கட்டி முடித்து 7 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ளதால், மாநகராட்சி நிா்வாகத்துக்கு வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து கடந்த ஜனவரி மாதத்தில் தெருமுனைக் கூட்டம், ஆா்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பிறகு இந்த வளாகத்துக்குப் புதை சாக்கடை இணைப்புக் கொடுக்கப்பட்டது. என்றாலும், இன்னும் இந்த வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இந்த வளாகத்தை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாகத் திறக்காவிட்டால் மக்களைத் திரட்டி, கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் தெரிவித்தது:

ஏற்கெனவே, இந்த வளாகத்தைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அப்பகுதியில் உள்ள சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால், திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது திறக்கச் சென்றாலும், எதிா்ப்புத் தெரிவிக்கச் சிலா் தயாராக இருக்கின்றனா். என்றாலும், இந்த வளாகத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com