சுடச்சுட

  

  பத்து ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 12th September 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் கே.ஆர். நந்தகுமார் தெரிவித்தது:
  அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கெனவே அரசாணைப் பிறப்பித்தது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரத்தை அரசு வழங்கியுள்ளது. இவை தவிர, அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான எஞ்சியுள்ள பள்ளிகளுக்கும் அரசு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். 
  அரசு ஒரு மாணவருக்கு ரூ. 30,000 வீதம் செலவு செய்கிறது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை ரூ. 11,500 தருவதாக அரசாணைப் பிறப்பித்துவிட்டு, ரூ. 4,000, ரூ. 5,000 வீதம் மட்டுமே வழங்குகிறது. பள்ளிகளுக்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது, ஓராண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கும் முறை உள்ளது. பழைய பள்ளிகளுக்குக் கட்டட அனுமதி தேவையில்லை என அரசாணையும், நீதிமன்ற ஆணையும் இருக்கின்றன. அதையும் மீறி அரசாணைப் பிறப்பிக்காமல், ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற வேண்டிய நிலையை ஏற்படுத்தி, பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக தொடர் அங்கீகாரத்தையும், நிரந்தர அங்கீகாரத்தையும் மூன்று ஆண்டுகளுக்குத் தர வேண்டும். புதிதாகப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரமாட்டோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறோம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குப் புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குத் தனி இயக்ககம் அமைக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளுக்கான ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்றார் நந்தகுமார். 
  இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஜி.ஆர். ஸ்ரீதர், கல்வி மாவட்டத் தலைவர்கள் ஏ.எச்.ஏ. அன்சாரி, பி. மைவண்ணன், எஸ். ராமலிங்கம், ஜெ. கலியபெருமாள், மாவட்டச் செயலர்கள் கே.பி. அறிவானந்தம், என். உதயகுமார், வி. செந்தில்குமார், எம். காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai