சுடச்சுட

  

  மொஹரம் பண்டிகை: தஞ்சை அருகே பூக்குழி இறங்கி வழிபட்ட இந்துக்கள்

  By DIN  |   Published on : 12th September 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக மொஹரம் பண்டிகையையொட்டி இந்துக்கள் பூக்குழி (தீமிதி) இறங்கி புதன்கிழமை வழிபட்டனர். 
  இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவர்.
  இந்நிலையில், தஞ்சாவூர் அருகே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகை கிராம விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டாடுகின்றனர்.
  இதன்படி, மொஹரம் பண்டிகையையொட்டி, இக்கிராமத்தில் இந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாள்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினர். அங்குள்ள அல்லா கோயிலிலும்,  அக்கிராமத்தில் உள்ள தெருக்களிலும்,  வீடுகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மொஹரம் பண்டிகையான புதன்கிழமை பஞ்சா எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கரகத்துக்குத் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டு சாத்தி வழிபட்டனர். பின்னர், பஞ்சா கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் (தீமிதி) இறங்கி வழிபட்டனர். இவர்களுக்குத் திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
  மேலும், பெண்கள் புதிய மண் கலயம் அல்லது புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டு, பின்னர் பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கினர். பண்டிகையையொட்டி, வெளியூர்களில் வசிக்கும் இக்கிராம மக்களும் ஊருக்கு வந்து கொண்டாடினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai