கல்லணை கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவி மாயம்
By DIN | Published On : 13th September 2019 09:53 AM | Last Updated : 13th September 2019 09:53 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) புதன்கிழமை குளிக்கச் சென்ற பள்ளி மாணவி நீரில் அடித்து செல்லப்பட்டார்.
தஞ்சாவூர் பூக்கார வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியன் மகள் டோனிகா (15). இவர் அருகிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் புதன்கிழமை மாலை தனது அக்கா மற்றும் உறவினர்களுடன் அதே தெருவில் உள்ள கல்லணைக் கால்வாய்க்குக் குளிப்பதற்காகச் சென்றார். கரையோரம் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் துணி விழுந்தது. அதை பிடிக்க முயன்ற இவர் தவறி கால்வாய்க்குள் விழுந்தார்.
அப்போது, நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் டோனிகா தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இவரது அக்காவும், உறவினர்களும் சப்தமிட்டதைக் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து ஆற்றில் குதித்து தேடினர். மேலும், தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் நிகழ்விடத்துக்குச் சென்று தேடினர். ஆனால், டோனிகாவை காணவில்லை.
இதுகுறித்து தெற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.