காவிரி உபரி நீர் திட்டம்: டெல்டாவில் அச்சமும்-எதிர்ப்பும்

நீண்ட நெடுங்காலமாகப் பற்றாக்குறை நதியாக உள்ள காவிரியில் உபரி நீர் திட்டம் குறித்த அறிவிப்பால் டெல்டாவில் அச்சமும் - எதிர்ப்பும் வலுவடைந்து வருகிறது.

நீண்ட நெடுங்காலமாகப் பற்றாக்குறை நதியாக உள்ள காவிரியில் உபரி நீர் திட்டம் குறித்த அறிவிப்பால் டெல்டாவில் அச்சமும் - எதிர்ப்பும் வலுவடைந்து வருகிறது.
கர்நாடகத்தில் அபரிமிதமான மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, காவிரியில் கிடைக்கக்கூடிய உபரி நீர் மட்டுமே தமிழகத்துக்கு நீராதாரமாக இருந்து வருகிறது. அப்படியொரு வெள்ளமும்,  அதன் மூலமான உபரி நீர் வரத்தும் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் 2005 ஆம் ஆண்டில் காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,  தண்ணீர் கடலில் கலந்தது. இதனிடையே,  2007 ஆம் ஆண்டிலும், 2013 ஆம் ஆண்டிலும் கொள்ளிடத்தில் செல்லும் அளவுக்கு உபரி நீர் வந்தது. நிகழாண்டில் கொள்ளிடத்தில் விடப்படும் உபரி நீர் பெரிய அளவில் இல்லை. எனவே, கடந்த 20 ஆண்டுகளில் நான்கு ஆண்டுகளில் மட்டுமே உபரி நீர் கிடைத்தது. மற்ற ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒருபோக சம்பா சாகுபடிக்குக் கூட விவசாயிகள் சிரமப்பட்டனர். இதில்,  2002, 2003, 2012, 2016 உள்ளிட்ட ஆண்டுகளில் கடும் வறட்சி ஏற்பட்டதுடன்,  சாகுபடி முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
இச்சூழலில், மேட்டூர்,  ஓமலூர்,  எடப்பாடி,  சங்ககிரி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக மிகப் பெரிய அளவில் 100 ஏரிகளை அமைத்து, அவற்றில் காவிரி உபரி நீரை தேக்கி வைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த ரூ. 565 கோடியில் புதிய திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 
எனவே, இப்புதிய திட்டம் நிறைவேற்றப்பட்டால், டெல்டா மாவட்டங்கள் முழுமையாகப் பாதிக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். ஏற்கெனவே, வெள்ளக்காலத்தில் கூட காவிரியில் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்வதில்லை. இதற்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாற்றில் விநாடிக்கு குறைந்தபட்சம் தலா 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அவ்வாறு திறந்துவிட்டால்தான் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்லும். ஆனால், தற்போது விநாடிக்கு அதிகபட்சமாக தலா 9,000 கன அடி வீதம்தான் திறக்க முடிகிறது. இதேபோல, கல்லணைக் கால்வாயில் குறைந்தது 4,000 கன அடி வீதம் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், 3,000 கன அடிக்கு மேல் திறக்க முடியவில்லை. இதற்கு மேல் திறந்துவிட்டால் கரை உடைந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், கடைமடைப்பகுதிக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, வெள்ளம் வந்தாலும் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லை என்ற நிலைமைதான் நீடிக்கிறது.
இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்தது: டெல்டாவில் காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, வெட்டாறு, அரசலாறு, பாமணியாறு, அரிச்சந்திரா நதி உள்ளிட்ட ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்தி முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கை எடுத்தால், கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்றடையும். இதேபோல, காவிரியைச் சார்ந்த ஏரிகளைத் தூர் வாரி நல்ல முறையில் பராமரித்தால் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியும். 
இதை விட்டுவிட்டு, சேலம் மாவட்டத்தில் புதிதாக உபரி நீர் திட்டம் என்பது தேர்தல் ஆதாயத்துக்காகச் செய்வது போல உள்ளது. அவ்வளவு உபரி நீர் நமக்குக் கிடைப்பதில்லை. இத்திட்டம் நடைமுறையில் வரும்போது, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு உபரி நீர் என்பது காலப்போக்கில் உரிமை நீராகிவிடும். அப்படி ஆகும்போது டெல்டாவுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்.   
உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்தினால், சேலம் மாவட்ட விவசாயிகளும் ஆண்டுதோறும் காவிரி நீரை எதிர்பார்க்கும் நிலைக்கு ஆளாவர். தண்ணீர் கிடைக்காதபோது போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். இது, தமிழர்களுக்குள் பகை மூட்டும் செயலாக அமையும். ஏற்கெனவே, உபரி நீர் திட்டத்துக்காக மாயனூரில் கதவணைக் கட்டப்பட்டது. இதன்மூலம் காவிரி - குண்டாறு (ராமநாதபுரம் மாவட்டம்) இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் மாயனூரில் கதவணைக் கட்டப்பட்டதற்கான நோக்கம். ஆனால், உபரி நீர் கிடைக்காததால்தான் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலைமையில், சேலத்தில் உபரிநீர் திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்றார் மணியரசன். ஏற்கெனவே, டெல்டா மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடிக்கு ஏறத்தாழ 210 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் கிடைக்கும். இதில், சாகுபடி காலத்தில் 167.25 டி.எம்.சி. மட்டுமே பெற முடியும். ஆனால், இந்த அளவுத் தண்ணீர்கூட பல ஆண்டுகளில் கிடைக்கவில்லை.
எனவே, புதிய உபரி நீர் திட்டத்துக்கு டெல்டா மாவட்டங்களில் எதிர்ப்பு வலுவடைந்து வருவது மட்டுமல்லாமல், அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com