கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பெண் பலி: மேலும் இருவரை தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தது வியாழக்கிழமை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. மேலும் ஆற்றில் மூழ்கிய 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குள்பட்ட மேலராமநல்லூர், கீழராமநல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் என மொத்தம் 42 பேர் பல்வேறு பணிகளுக்காக புதன்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் படகில் பயணித்தனர்.அப்போது, படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்தவர்கள் ஆற்றில் மூழ்கினர். 42 பேரில் 39 பேர் மீட்கப்பட்டனர்.
ஆற்றில் மூழ்கிய பாபநாசம் வட்டம், நாயக்கர்பேட்டையைச் சேர்ந்த டி. பழனிசாமி (58), பட்டுக்குடியைச் சேர்ந்த டி. சுயம்பிரகாசம் (58), புத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி ராணி (40) ஆகியோரை தேடும் பணி நடைபெற்று வந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரையோரம் குடிகாடு, தட்டுமால் படுகை, திருவைக்காவூர், நீலத்தநல்லூர், அணைக்கரை ஆகிய பகுதிகளில் உள்ளூர் மீனவர்கள், தனிப்படை போலீஸார், பாபநாசம், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட நிலையங்களைச் சார்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஆகியோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  
இந்நிலையில், கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் தண்ணீரில் அடித்து வரப்பட்ட பெண் சடலத்தை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மீட்டனர். இறந்த பெண், படகு விபத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய ராணி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராணியின் சடலத்தை போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், பழனிசாமி, சுயம்பிரகாசத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
அமைச்சர் ஆய்வு:  இதனிடையே, கொள்ளிடக் கரையில் சம்பவ இடத்துக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு வியாழக்கிழமை காலை சென்றார். மீட்புப் பணியை விரைவுபடுத்துமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தார். 
அப்போது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மீட்கப்பட்டோருக்கு ஆறுதல்: மேலராமநல்லூர், கீழராமநல்லூர் கிராமங்களுக்கு வியாழக்கிழமை சென்ற அமைச்சர் இரா. துரைக்கண்ணு, படகு விபத்தில் மீட்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், ஆட்சியர்கள் டி.ஜி.வினய் (அரியலூர்), ஆ. அண்ணாதுரை (தஞ்சாவூர்), வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com