Enable Javscript for better performance
கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் விடாவிட்டால் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் விடாவிட்டால் போராட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 06:26 AM  |   அ+அ அ-   |    |  

    கடைமடைப் பகுதிக்கு ஒரு வாரத்துக்குள் தண்ணீர் விடாவிட்டால் மக்களைத் திரட்டி பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என விவசாய சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் முடிவு செய்துள்ளன. 
    தஞ்சாவூரில் விவசாய சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ. திருநாவுக்கரசு, தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் அரங்க. குணசேகரன், மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் தெரிவித்தது:
    கடந்த ஆண்டு விநாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. நிகழாண்டு விநாடிக்கு 30,000 கன அடி வீதம் தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. ஆனால், கடைமடைப் பகுதிக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. 
    காவிரிப் படுகை விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு அரசுத் தயாராக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் விவசாயமே அழிந்து, மோசமான பேரழிவு ஏற்படும். இதுபோன்ற காலகட்டத்தில் மூத்த விவசாயிகளை அழைத்து பேசி, ஆலோசனை பெற்று, அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    கடந்த ஆண்டு காவிரியில் வெள்ளம் வந்தும், வாய்க்கால்களுக்குத் தண்ணீர் செல்லவில்லை. இதேபோல, நிகழாண்டும் திருவாரூர், ஆம்பலாப்பட்டு, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவில்லை. குறிப்பாக, பேராவூரணி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான ஏரிகளுக்குத் தண்ணீர் போகவில்லை. இக்குளங்களுக்குத் தண்ணீர் செல்ல வேண்டுமானால் கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 4,200 கன அடி வீதம் தண்ணீர் விட வேண்டும். இதுமட்டுமல்லாமல், கல்லணை தலைப்புப் பகுதியில் உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரிக்குக் கூட தண்ணீர் வரவில்லை. 
    ஒரு வாரத்துக்குள் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
    கடந்த 3 ஆண்டுகளில் தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இன்னும் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்றடையவில்லை. நீர் மேலாண்மையைப் பொதுப் பணித் துறைச் சீர்குலைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உபரி நீரையும் விவசாயத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்தும்,  நீரைச் சேமிக்க நடவடிக்கை முடியவில்லை என்றால், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக் குழு அமைத்து, தண்டிக்க வேண்டும் என்றனர்.
    அப்போது, சமவெளி விவசாயிகள் இயக்கத் தலைவர் சு. பழனிராசன், கம்யூனிஸ்ட் மா.லெ. மக்கள் விடுதலை மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், பொறியாளர் முத்து. சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp