Enable Javscript for better performance
சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு: பட்டுக்கோட்டையில் தொழில்நுட்ப ஆலோசனைக் கு- Dinamani

சுடச்சுட

    

    சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு: பட்டுக்கோட்டையில் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர் ஆய்வு

    By DIN  |   Published on : 14th September 2019 06:31 AM  |   அ+அ அ-   |    |  

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிகளில் சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகளை தொழில்நுட்ப ஆலோசனை குழுவினர் நேரில் பார்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
    பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் கஜா புயலால்  பெருமளவு தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்ததாலும், கொண்டை திருகப்பட்டதாலும் ஏராளமான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 
    இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதி விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, வாழ்வாதார தொகுப்புத் திட்டத்தையும், சிறப்பு தொகுப்புத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதன்மை தென்னை வளர்ச்சி அலுவலர் சரதின்தாஸ், சென்னை மண்டல தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் பாலசுதாகரி,  கேரள மாநிலம், காசர்கோடு வேளாண் விஞ்ஞானி சுப்பிரமணியன், அ. ஆனந்தன் (கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்), பேராசிரியர் மாதவன் (குன்றக்குடிவேளாண் அறிவியல் மையம்), அ.பொன்மலர் (சென்னை வேளாண் துணை இயக்குநர்), அ.ஜஸ்டின் (தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குநர்(மா.தி))  ஆகியோர் அடங்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர் பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜா புயலால்  பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு தொகுப்புத் திட்டத்தை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  
    இவர்கள், தாமரங்கோட்டை தெற்கு கிராமத்தைத் சேர்ந்த விவசாயி ரூஸ்வெல்ட், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாம்பசிவம் ஆகியோருக்கு சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் புதிதாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு, அவை நடவு செய்யப்பட்டிருந்த தென்னந்தோப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடினர். 
    அப்போது, தென்னங்கன்றுகளை  நடவு செய்து  பராமரித்தல்,  உரம் மற்றும்  நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு ஆகியன  குறித்த  தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். மேலும்,  புயல், கனமழை போன்ற இயற்கை இடர்பாடுகளின்போது தென்னை மரங்கள் அதிக அளவில் வேருடன் சாயாமலிருக்க,  மரத்திற்கு மரம் 30 அடி இடைவெளி விட வேண்டுமென அறிவுறுத்தினர்.
    இந்த ஆய்வின்போது, பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர்(பொ) எஸ்.சங்கீதா, வேளாண் அலுவலர் சுதா மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய  மாணவிகள்  உடனிருந்தனர்.

    kattana sevai