Enable Javscript for better performance
தஞ்சையில் நாளை உணவுத் தொழில்நுட்பப் பொருட்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சையில் நாளை உணவுத் தொழில்நுட்பப் பொருட்காட்சி தொடக்கம்

    By DIN  |   Published on : 14th September 2019 06:25 AM  |   அ+அ அ-   |    |  

    தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.எப்.பி.டி.) உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.15) தொடங்கி தொடர்ந்து இரு நாள்கள் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து செய்தியாளர்களிடம் கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தது:
    இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் வி. சுப்பிரமணியனின் 117-வது  பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமையும்,  திங்கள்கிழமையும் கழக வளாகத்தில் உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி மற்றும் நிறுவனத்தின் உணவு பதப்படுத்துதல் இயந்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மக்களுக்காகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
    விவசாயிகளின் வாழ்வாதாரம், பெருகி வரும் மக்கள்தொகைக்கு உணவளித்தல் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையின் சிறப்பம்சங்கள் என்ற தலைப்பில் இப்பொருட்காட்சி நடைபெறவுள்ளது.
    விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமையும் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    நவீன உணவு பதப்படுத்துதல் இயந்திரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டு உணவுப்பொருள்கள் தயாரிப்பதற்கான உபகாரங்கள் மற்றும் மதிப்புப் பொருட்கள், உணவு தரப் பரிசோதனைகள் புரியும் விதம் மற்றும் பேக்கிங் செய்யும் வழிமுறைகளைக் கண்டு தெரிந்து கொள்ளலாம்.   
    மேலும், இக்கழகத்தில் பயிற்சி பெற்று தொழில்முனைவோரானவர்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளனர். 
    இதில், கருப்பு கவுனி அரிசியில் இருந்து செய்யப்பட்ட பாஸ்தா, சேமியா, நூடுல்ஸ், குக்கீஸ், சிறுதானிய படலம் ஆகியவை வெளியிடப்படவுள்ளன. மேலும் விவசாயிகளின் பணிச்சுமையைக் குறைப்பதற்கு நவீன விவசாய கருவிகளைக் கண்டறிதல் மற்றும் நீர் மற்றும் மாசு மேலாண்மைக்கான வழிவகைகள் கண்டறிதல் போன்ற தலைப்புகளில்  மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
    மேலும் உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. சிறுதானிய ஐஸ்கிரீம், சிறுதானிய பாப்கார்ன், பழச்சாறுகள் மற்றும் குக்கீஸ் மாதிரிகள் போன்றவை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார் அனந்தராமகிருஷ்ணன்.

    kattana sevai