மர விவசாயம் செய்தால் மண் வளமாகும்: ஜக்கி வாசுதேவ்

மர விவசாயம் செய்தால் மண் வளமாகும் என்றார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.
மர விவசாயம் செய்தால் மண் வளமாகும்: ஜக்கி வாசுதேவ்

மர விவசாயம் செய்தால் மண் வளமாகும் என்றார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.
காவிரி நதிக்குப் புத்துயிரூட்டுவதற்காகத் தலைக்காவிரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஜக்கி வாசுதேவ் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார். பின்னர் அவர் பேசியது:
தென்னிந்தியாவில் 12,000 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறோம். இந்த மண்ணை வளமாகவே வைத்திருந்தோம். மண் வளமாக இருக்க வேண்டுமானால், மரம் இருக்க வேண்டும். மரத்தில் இருந்து விழும் இலைகள், ஆடு, மாடுகளின் சாணம் போன்றவற்றின் மூலம் இந்த மண் வளமாக இருந்தது.
நர்மதாவில் 65 சதவீதமும், கிருஷ்ணா நதியில் 70 சதவீதமும் தண்ணீர் குறைந்துவிட்டது. நம் நாட்டில் உள்ள ஆறுகளில் சராசரியாக 40 சதவீதம் நீரோட்டம் குறைந்துள்ளது. இதற்கு மரங்கள் இல்லாதததுதான் அடிப்படை காரணம். இதனால், பல இடங்கள் பாலைவனமாக மாறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நாம் எப்படி விவசாயம் செய்ய முடியும். எவ்வாறு வாழ இயலும்.  
மர விவசாயம் செய்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் மூன்று முதல் எட்டு மடங்கு பொருளாதாரம் அதிகரிக்கும். ஆனால், மரத்தை வெட்டி விற்பதில் சட்டச் சிக்கல் இருப்பதால், மரம் வைக்கும் பழக்கம் நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. 
மரத்தை வெட்டி விற்பதில் உள்ள சட்டச் சிக்கல் தொடர்பாக மத்திய அரசிடம் பேசியுள்ளேன். இதேபோல, கர்நாடகம் மற்றும் தமிழக அரசிடமும் பேசியுள்ளேன். இதற்குத் தீர்வு ஏற்படுத்தி விரைவில் அறிவிப்பு செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளன.
நாம் மரம் வளர்த்தால்தான், இந்த மண்ணில் நம் குழந்தைகள் எதிர்காலத்தில் வாழ முடியும். காவிரியில் பிரச்னை இல்லை. பிரச்னை நமக்குள்தான் இருக்கிறது. முன்பு, தண்ணீர் நிறைய இருந்தது. அதனால், சண்டை இல்லை. இப்போது, ஒரு குவளையில் தண்ணீர் இருக்கிறது என்றால், அது யாருக்கு அருகில் இருக்கிறதோ அவரே எடுத்துக் கொள்கிறார். அதுபோல, காவிரியில் தண்ணீர் குறைந்துவிட்டதால், சண்டை வருகிறது. 
காவிரியில் 12 மாதங்களுக்குத் தண்ணீரை ஓடச் செய்தால், நமக்கு யாருடனும் சண்டை இருக்காது. எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது 2 மரங்களையாவது நட வேண்டும். இதைப் பற்றி ஒவ்வொரு நபரும் 100 பேரிடம் எடுத்து சொல்ல வேண்டும். 
எனவே, காவிரி என்றால் பிரச்னை எனக் கூற வேண்டாம். காவிரி நம் உயிர், காவிரி நமது தாய் எனக் கூறுங்கள்.
ஒரு வட்டத்தில் 250 முதல் 500 பேர் மரங்களை வளர்த்தால் மண் வளமாக இருக்கும். காவிரி புத்துணர்வு பெறும். 242 கோடி மரங்களை வளர்த்தால் மண்ணில் 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். இந்த மரங்களை வளர்ப்பது தொடர்பாக நவம்பர் மாதம் முதல் விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றார் ஜக்கி வாசுதேவ்.
வளம் குறித்தே ஆய்வு: இதையடுத்து, அவரிடம் ஹைட்ரோ கார்பன் பிரச்னை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பொதுவாக ஒரு நாட்டில் என்னென்ன வளம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். 
அதுபோல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்னென்ன வளங்கள் இருக்கின்றன என்பதை நாம் ஆய்வு செய்து வைத்து கொள்கிறோம். இதன் மூலம், நம் நாட்டில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும். எனவே, இதைச் செய்யக்கூடாது எனக் சொல்லக்கூடாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com