இந்தி மொழி குறித்த அமித்ஷாவின் கருத்தைக் கண்டித்து தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 19th September 2019 09:38 AM | Last Updated : 19th September 2019 09:39 AM | அ+அ அ- |

இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திதான் இந்தியாவின் ஒரே மொழி, உலக அரங்கின் அடையாளம், அனைவரும் இந்தி கற்க வேண்டும் என பேசியிருப்பது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் செயல். அனைவருக்கும் பொதுவான, பொறுப்பான ஒரு உள்துறை அமைச்சர் பல்வேறு மாநிலங்களில் கலவரங்களைத் தூண்டக்கூடிய வகையிலும், இந்தியாவை பிளவுப்படுத்தக்கூடிய வகையிலும், ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் பேசியிருப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலர் பா. அருண்சோரி, தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ. திருநாவுக்கரசு, தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் நா. வைகறை, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு. பழனிராசன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலர் ராவணன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூரில்: கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மூக்கணாங்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவசாமி உள்ளிட்ட கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே நகர் காங்கிரஸ் கட்சி தலைவர் வெயில்முத்து தலைமையில் அக்கட்சியினர், அமைச்சரின் உருவ பொம்மையை எரித்தனர். இது குறித்து பஜார் காவல் சார்பு -ஆய்வாளர் வீராச்சாமி அளித்த புகாரின் பேரில் நகரத் தலைவர் வெயில்முத்து உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
சிவகாசி: இதே போன்று சிவகாசியிலும் அமைச்சரின் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 5 பேரை சிவகாசி கிழக்குப் போலீஸார் கைது செய்தனர்.