சொற்குவைத் திட்டம்: மாணவர்களிடமிருந்து 30,000 கலைச்சொற்கள் சேகரிப்பு
By DIN | Published On : 19th September 2019 09:47 AM | Last Updated : 19th September 2019 09:47 AM | அ+அ அ- |

சொற்குவைத் திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து 30,000 கலைச்சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு அரசுச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தங்க. காமராசு.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தமிழ்நாடு அரசுச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், கல்லூரி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் மேலும் தெரிவித்தது:
சொற்குவைத் திட்டத்தைக் கல்லூரி மாணவர்களிடையே பரப்புவதற்காகச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் கல்லூரிகளில் அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, சொல் உண்டியல் அமைக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த கலைச்சொற்களை எழுதி சொல் உண்டியலில் இட்டு வருகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் சிறந்த முதல் 3 கலைச்சொற்களை எழுதும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்படுகிறது.
இதுவரை 14 கல்லூரிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சொல் உண்டியலில் 30,000-க்கும் அதிகமான கலைச்சொற்களை மாணவர்கள் எழுதி போட்டுள்ளனர்.
குறிப்பாக, சோழ மண்டலத்தில் செப். 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மொத்தம் 5 கல்லூரிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. இதில், கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் மட்டும் சொல் உண்டியலில் ஏறத்தாழ 6,000 கலைச் சொற்களை மாணவிகள் எழுதி போட்டுள்ளனர். ஐந்து கல்லூரிகளில் மொத்தம் சுமார் 10,000 கலைச் சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இக்கலைச் சொற்களைத் தமிழ்க் கலைக் கழகத்தில் உள்ள அறிஞர்கள் ஆய்வு செய்வர். இதில், ஏற்புடைய சொற்களை அறிஞர்கள் குழு ஏற்பு செய்யும். பின்னர், ஏற்கப்பட்ட சொற்கள் தொடர்பாக அரசாணைப் பெற்று வலைதளத்தில் வெளியிடப்படும்.
இதுவரை 3,000 கலைச்சொற்களுக்கு அரசாணைப் பெறப்பட்டுள்ளது. இவற்றை வலைதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 10,000 கலைச்சொற்களுக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசாணைக் கிடைத்துவிடும்.
தமிழக முதல்வரின் நட்சத்திரத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடத்துவதற்காக 62 கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. கட்டணமில்லா அழைமையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் யார் வேண்டுமானாலும் 14469 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு சொல் சார்ந்த ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதில், அறிஞர்கள் பதில் சொல்வர். தற்போது பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படும் இம்மையம் அரசாணை கிடைத்த பிறகு 24 மணி நேர மையமாக மாற்றப்படும்.
வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி, சென்னையில் நவ. 8ஆம் தேதி அகராதியியல் திருநாள் நடத்தப்படவுள்ளது. மாநாடு போல நடத்தப்படவுள்ள இந்நிகழ்ச்சியில் போட்டிகள், அமர்வுகள் உள்ளிட்டவை இடம்பெறும். இதில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி திருந்திய பதிப்பு வெளியிடப்படவுள்ளது. மேலும், அகராதியியலுக்காக சொல் வயல் என்ற மாத இதழ் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் தங்க. காமராசு.
இக்கருத்தரங்கத்துக்குக் கல்லூரி கல்வி தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர் தி. அறிவுடைநம்பி தலைமை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரித் தலைவர் மு. இளமுருகன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகச் சிறப்பு நிலை அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் சு. நரேந்திரன், கல்லூரிக் கல்வி இயக்கக முன்னாள் உதவி இயக்குநர் அ. மதிவாணன், மொழியியல் வரலாற்று ஆய்வறிஞர் ம.சோ. விக்டர், எழுத்தாளர் ஜெயபாஸ்கரன், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.