காவல்துறை சார்பில் வெளி மாநிலத்தவர்களின் சுயவிவரங்கள் சேகரிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களின் சுயவிவரங்களைக் காவல் துறையினர் சேகரித்து பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களின் சுயவிவரங்களைக் காவல் துறையினர் சேகரித்து பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை மற்றும் அன்னிய நபர்களின் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக தஞ்சாவூர் சரகக் காவல் துறைத் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன் உத்தரவின்படி,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் அறிவுரையின்படி ஒவ்வொரு காவல் நிலையப் பொறுப்பு அலுவலர்களும் தங்களது காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்ப்பவர்களின் விவரங்களை சேகரித்துள்ளனர். 
இதில், ஹோட்டல், ஜவுளிக்கடை, போர்வை வியாபாரம், சாலையோர பொம்மைக் கடை, பழச்சாறு கடை, பிளாஸ்டிக் கடை, கட்டடக் கட்டுமானப் பணி, பேன்சி ஸ்டோர், காலணி கடை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரக்கூடிய நபர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகவும், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும், அவர்களுடைய சுயவிவரங்கள் இரு மாதங்களாகச் சேகரிக்கப்பட்டது. 
இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 368 வெளி மாநிலத்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுடைய சுயவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு வெளி மாநிலத்தவரின் மாநில முகவரி, தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய முகவரி, வெளி மாநிலத்தவர்கள் தொடர்பில் உள்ள இம்மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களின் விவரங்கள், மாவட்டத்தில் செய்யக்கூடிய பணியின் தன்மை, பணியிடம், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, தொலைபேசி எண், குடும்ப உறுப்பினர்களின் விவரம், முழு அளவு புகைப்படம், விரல் ரேகை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 
இது, குற்றங்களில் ஈடுபடும் வெளி மாநில நபர்களை அடையாளம் கண்டு விரைவாகக் குற்றவாளிகளைக் கைது செய்யப் பயனுள்ளதாக இருக்கும். காவல் துறையின் நடவடிக்கை வெளி மாநிலத்தவர் வசிக்கக்கூடிய பகுதிக்கு அருகில் வசித்து வரும் இம்மாவட்டப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com