Enable Javscript for better performance
வெண்ணாறு கோட்டத்தில் 214 கி.மீ. தூர்வாரும் பணி நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு கோட்டத்தில் 214 கி.மீ. தொலைவுக்குத் தூர் வாரும் பணி நிறைவடைந்துள்ளது என்றார் பொதுப் பணித் துறையின் வெண்ணாறு கோட்ட உதவி செயற் பொறியாளர் ஆர். இளங்கோ.
    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள கம்பர் நத்தம் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதகு சீரமைப்புப் பணி, செட்டிசத்திரம் வாய்க்காலில் தூர் வாரும் பணி, சிக்கப்பட்டு கிராமத்தில் புத்தூர் வாய்க்காலில் கீழ்க்குமிழி சீரமைப்புப் பணி ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
    வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ. 2.22 கோடி மதிப்பில் 15 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 41.4 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால்கள் தூர் வாரும் பணி, 7 இடங்களில் மதகுகள் புதிதாகக் கட்டும் பணி, 17 இடங்களில் தடுப்புச் சுவர் கட்டும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.  இதேபோல, சிறப்புத் தூர்வாரும் திட்டத்தின் கீழ் 173.44 கி.மீ. தொலைவுக்கு ரூ. 40.6 கோடி மதிப்பில் 16 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 9 பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் ரூ. 1.47 கோடியில் 98.68 கி.மீ. தொலைவுக்குத் தூர் வாரப்பட்டுள்ளது.
    கம்பர் நத்தம் கிராமத்தில் வடவாற்றிலிருந்து பிரியும் மேட்டுவாய்க்கால் தலைப்பில் சிதிலமடைந்திருந்த மதகு குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. மேலும், சிறப்புத் தூர்வாரும் திட்டத்தின் கீழ் 2.50 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
    இதேபோல, வடவாற்றிலிருந்து கம்பர் நத்தம் கிராமத்தில் பிரிந்து செல்லும் செட்டி சத்திரம் வாய்க்காலில் சிறப்பு தூர் வாரும் பணி திட்டத்தின் கீழ் 8 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4.50 லட்சம் மதிப்பில் தூர் வாரப்பட்டு, தற்போது பாசனத்துக்குத் தண்ணீர் சீராகச் செல்கிறது.  சிக்கப்பட்டு கிராமத்தில் புத்தூர் வாய்க்கால் ரூ. 11 லட்சத்தில் குடிமராமத்து பணியில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கப்பட்டு, முன்னாவல்கோட்டை, காளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1,245 ஏக்கரில் சாகுபடி செய்ய தண்ணீர் எளிதாகச் செல்கிறது என்றார் இளங்கோ. அப்போது உதவி செயற் பொறியாளர் ஆர். அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் ஜி. மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai