Enable Javscript for better performance
ஸ்டாலினின் செயல் ஜனநாயகத்துக்கு தொடர்பில்லாதது: வானதி சீனிவாசன்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டாலினின் செயல் ஜனநாயகத்துக்கு தொடர்பில்லாதது: வானதி சீனிவாசன்

    By DIN  |   Published on : 25th September 2019 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் ஜனநாயகத்துக்கு தொடர்பில்லாதது என்றார் பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன்.
    தஞ்சாவூரில் தேச ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஜம்மு - காஷ்மீர் நேற்றும் - இன்றும் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
    திமுகவில் நீண்ட காலமாக உழைக்கக் கூடியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. திமுக இளைஞரணித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 
    ஸ்டாலினின் மகன் என்பதைத் தாண்டி அந்தப் பதவிக்கு அவர் வருவதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கிறது என்பதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கினால் நன்றாக இருக்கும். அக்கட்சியில் இளம் வயதிலிருந்து உழைப்பவர்கள், கட்சிக்காகத் தியாகம் செய்தவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், முதல் நிலை என்பது எங்கள் குடும்பத்துக்குத்தான் சொந்தம் என்பதே உதயநிதி ஸ்டாலினின் நியமனம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
    ஜனநாயகத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் செயல்படும் ஸ்டாலின், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் எனக் கூறி, தில்லிக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். எனவே, அவருடைய உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
    அதன் பின்னர் ஹிந்தி மொழி திணிப்பு என்ற ஒரு உருவகத்தை மக்களிடம் காட்டினார். உள்துறை அமைச்சர் சொன்னதை திரித்துக் கூறி முதலில் போராட்டம் எனக் கூறிவிட்டு, பின்னர் நாங்கள் விளக்கத்தைப் புரிந்து கொண்டோம் என்கிறார். விளக்கத்தைப் புரிந்து கொள்ள போராட்டம் அறிவிக்க வேண்டுமா? அதற்கு பின் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுவிட்டோம் எனக் கூறுகிறார். இதற்கு முன் சட்டப்பேரவையிலும் இதேமாதிரி பேரவைத் தலைவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். கடந்த காலத்தில் அவர் எடுக்கிற முடிவுகளையும், அதற்கு பின்பு பின்வாங்குவதையும் பார்த்தால் ஸ்டாலின் தீவிர குழப்பத்தில் இருப்பதாக எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது என்றார் வானதி சீனிவாசன்.
    கருத்தரங்கத்துக்கு மருத்துவர் சாரதா தலைமை வகித்தார். முன்னாள் லெப்டினன்ட் கர்னல் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai