சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு இங்கிலாந்து பேராசிரியர் தேர்வு

நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு இங்கிலாந்து பேராசிரியர் முனைவர் ஆடம் ஹார்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு இங்கிலாந்து பேராசிரியர் முனைவர் ஆடம் ஹார்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்ரமணியம் தெரிவித்திருப்பது:
ராமானுஜத்தின் தாக்கத்தால் கணிதவியல் ஆய்வில் மிகச் சிறந்த பங்களிப்பு அளித்து வரும் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞருக்கு சாஸ்த்ரா - ராமானுஜன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதன்படி, 2019 ஆம் ஆண்டுக்கான விருது இங்கிலாந்து நாட்டின் வார்விக் பல்கைலக்கழக எண்ணியல் அறிஞர் முனைவர் ஆடம் ஹார்பர் என்பவருக்கு வழங்கப்படவுள்ளது.  இவர் பகுப்பாய்வு, நிகழ்தகவு எண் கோட்பாட்டில் மிகச் சிறந்த பங்களிப்பு அளித்து வருகிறார். 
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2012 ஆம் ஆண்டில் இவர் சமர்பித்த மிக அற்புதமான முனைவர் பட்ட ஆய்வறிக்கை மற்றும் 2013 ஆம் ஆண்டில் கிரெல்லின் இதழில் வெளியான இவரது கட்டுரையிலிருந்து இவருடைய பங்களிப்பு தொடங்கியுள்ளது. எண் கோட்பாட்டுக்கு இவரது மிகப் பெரிய பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுகிறது.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் வளாகத்தில் ராமானுஜனின் பிறந்த நாளான டிச. 22-ம் தேதி நடைபெறவுள்ள பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் ஆடம் ஹார்பருக்கு 10,000 அமெரிக்க டாலருடன் கூடிய இந்த விருதுடன் சான்று வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கான தேர்வுக் குழுவில் புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் அல்லாடி கிருஷ்ணசுவாமி தலைமையில் 6 சிறந்த கணிதவியல் அறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். சாஸ்த்ரா-ராமானுஜன் விருது 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து உலகளாவிய நற்பெயரைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு மஞ்சுல் பார்கவா, அக்சய் வெங்கடேஷ் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com