மத்திய கால விதை நெல் ரகங்களை விதைக்க யோசனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு மத்திய கால விதை நெல் ரகங்களை விதைக்குமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு மத்திய கால விதை நெல் ரகங்களை விதைக்குமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் இதுவரை நீண்ட கால விதை ரகங்கள் 711 டன்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர் மற்றும் வடகிழக்குப் பருவ மழையின் மூலம் பெறப்படவுள்ள தண்ணீரைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள சூழலில் மத்திய கால ரகங்களை விதைப்பது ஏற்றதாகும். இதன் மூலம் வடகிழக்குப் பருவ மழையின் பாதிப்புக்குப் பயிர் உள்ளாகாமல் நல்ல மகசூலை பெற இயலும்.
இதுவரை மத்திய கால விதை நெல் ரகங்களில் 318 டன்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 175 டன்கள் மத்திய கால விதை நெல் ரகங்களும், 432 டன்கள் குறுகிய கால விதை நெல் ரகங்களும் இருப்பு உள்ளது.
இந்த விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (அரிசி) திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் விதை மற்றும் நடவு பொருட்களுக்கான துணை இயக்கம் ஆகிய திட்டங்களில் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது. மேலும், தனியார் விதை விற்பனை மையங்களில் போதுமான அளவு மத்திய கால ரக விதை நெல் இருப்பில் உள்ளது.  சம்பா சாகுபடிக்காக 9,984 டன்கள் யூரியா, 10,387 டன்கள் டி.ஏ.பி., 7,013 டன்கள் கூட்டு உரம், 4,195 டன்கள் பொட்டாஷ்  ஆகியவை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் மையங்களில் என மொத்தம் 31,579 டன்கள் இருப்பில் உள்ளன.   நெற் பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் பொருளாதார சேதத்துக்கு மிகும்போது, அதை கட்டுப்படுத்த 63,920 டன்கள் தூள் மருந்தும், 1.94 லட்சம் லிட்டர் திரவ பூச்சிக் கொல்லி மருந்தும் இருப்பில் உள்ளது.
எனவே, தற்போதுள்ள நீரைக் கொண்டு, மத்திய கால ரகங்களை உபயோகிக்கலாம். மேலும், நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள வாய்ப்புள்ள இடங்களில் விதைப்புப் பணி மேற்கொள்ளவும், திருந்திய நெல் சாகுபடி அல்லது இயந்திர நடவு தொழில்நுட்பங்களை அதிக இடங்களில் மேற்கொண்டு நாற்றங்கால் அமைத்து, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com