தமிழ்த் தொண்டாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்: பழ. நெடுமாறன் பேச்சு

அறிஞர்கள் வழியில் தமிழ்த் தொண்டாற்ற இளைஞர்கள் முன் வர வேண்டும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.


அறிஞர்கள் வழியில் தமிழ்த் தொண்டாற்ற இளைஞர்கள் முன் வர வேண்டும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தமிழறிஞர்கள் க.ப. அறவாணன், சிலம்பொலி செல்லப்பன், கி.த. பச்சையப்பன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரது படத்திறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:
உலகத் தமிழர் பேரமைப்புத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவர் க.ப. அறவாணன். இந்தப் பேரமைப்பின் அனைத்து நிகழ்வுகளுக்கும் துணை நின்றார். தமிழ்ச் சமுதாயத்தை இடித்து திருத்தும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைவதற்குத் துணையாக இருந்தவர் அறவாணன்.
மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது மலர் பொறுப்பாளராக இருந்தவர் சிலம்பொலி செல்லப்பன். தமிழ்ச் சான்றோர் பேரவையுடன் இணைந்து தமிழுணர்வைப் பரவச் செய்தார். ராவண காவியம் குறித்து 3 நாட்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியவர். 
தமிழ்ப் பேராட்டக் களத்தில் முதல் ஆளாக நின்றவர் கி.த. பச்சையப்பன். தமிழுக்காகவே வாழ்ந்த இவரை அனைத்து கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர். அந்த அளவுக்கு அவர் அனைவருக்குமான பொது நபராகத் திகழ்ந்தார். 
வரலாற்றுச் செய்திகளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் பிரபஞ்சன். பாரத கதை மாந்தர்களை வைத்து, பெண்களின் மனக்குமுறலை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தினார்.
இவர்களுடைய வழியைப் பின்பற்றி இளைஞர்களும் தமிழுக்குத் தொண்டாற்ற முன்வர வேண்டும் என்றார் நெடுமாறன்.
நிகழ்ச்சியில் சிலம்பு நா. செல்வராசு, நாமக்கல் பீ.ஏ. சித்திக், புலவர் இரத்தின. வேலன், ந.மு. தமிழ்மணி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், பொறியாளர் ஜோ. ஜான் கென்னடி, பேராசிரியர் வி. பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com