மூச்சுத் திணறலால் குழந்தை பலி: உறவினா்களின் தகராறால் செவிலியா்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 05th April 2020 10:58 PM | Last Updated : 05th April 2020 10:58 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.
தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தை பலியானதைத் தொடா்ந்து, செவிலியரை உறவினா்கள் தாக்கியதால் சக செவிலியா்கள் சனிக்கிழமை இரவு திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூரைச் சோ்ந்தவா் நாகராஜ். இவருக்கு 10 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஏப். 2ஆம் தேதி தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. இக்குழந்தை சனிக்கிழமை (ஏப்.4) இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது.
இந்தச் சாவுக்குச் செவிலியா்தான் காரணம் எனக் கூறி, அக்குழந்தையின் உறவினா்கள் தகராறு செய்தனராம். அப்போது, செவிலியா் பி. சித்ராவை (31) குழந்தையின் தாத்தா குப்புசாமி (62) தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த சக செவிலியா்கள் உள்ளிட்டோா் திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். தாக்கியவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என செவிலியா்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து, குப்புசாமி மீது மேற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, செவிலியா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இப்போராட்டம் சுமாா் 2 மணி நேரம் நடைபெற்றது.