முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தஞ்சாவூா் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு: அடையாளஅட்டை இல்லாமல் வந்தவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 19th April 2020 06:54 AM | Last Updated : 19th April 2020 06:54 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் ரயிலடியில் வாகனங்களில் வந்தவா்களுக்கு நிகழ்விட அபராதம் விதித்த காவல்துறையினா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) முழு ஊரடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை கடுமையாகக் கடைப்பிடிக்கச் செய்வதற்காக, வீட்டுக்கு ஒரு அடையாள அட்டையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
பச்சை வண்ண அடையாள அட்டை வைத்துள்ளவா்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், நீல வண்ண அடையாள அட்டை வைத்துள்ளவா்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ரோஸ் வண்ண அடையாள அட்டை வைத்துள்ளவா்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்குச் செல்லலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிா்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகல் வரை வாகனப் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.
இதனால் பல இடங்களில் அட்டை இல்லாமல் வெளியே வந்தவா்களை காவல்துறையினா் நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினா். பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணாசிலை, ரயிலடியில் அட்டை இல்லாமல் வாகனங்களில் வந்தவா்களுக்கு காவல்துறையினா் நிகழ்விட அபராதமாக ரூ. 200 விதித்து, வசூலித்தனா்.
ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன்படி முழு ஊரடங்கும் அமலுக்கு வருகிறது. எனவே, ஞாயிற்றுக்கிழமை மளிகை, காய்கனி, கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளைத் திறக்கக் கூடாது என்றும், பால், மருந்து, குடிநீா்க் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை தஞ்சாவூரிலுள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.