முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம்
By DIN | Published On : 19th April 2020 06:52 AM | Last Updated : 19th April 2020 06:52 AM | அ+அ அ- |

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த பீய்ச்சி அடிக்கப்படும் நீா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள புளியந்தோப்பு கிராமத்தில், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் குறித்து சனிக்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயியின் வயலில் நடைபெற்ற இப்பணியை, வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தொடக்கி வைத்து தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக, ஆங்காங்கே தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. இந்த தாக்குதலை ஒருங்கிணைந்த பூச்சி நோய் கண்காணிப்பு முறைகளைக் கடைப்பிடித்தலின் மூலம் கட்டுப்பபடுத்தலாம்.
தென்னை மர இலைகளில் நீரை வேகமாகப் பீய்ச்சி அடிக்க வேண்டும். பசை தடவிய மஞ்சள் வண்ண ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 8 வீதம், மரங்களின் அடிப்பகுதியில் அல்லது மரங்களின் ஊடாக தென்னந்தோப்பில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
என்காா்சியா எனப்படும் ஒட்டுண்ணி இயற்கையாக சில ரூகோஸ் வெள்ளை ஈ தாக்கப்பட்ட தோப்புகளில் காணப்படும். அதை இனங்கண்டு ஒட்டுண்ணியுடன் தென்னை இலை துண்டுகளை, புதியதாக தாக்குதலுக்கு உள்பட்ட தென்னந்தோப்புகளில் தென்னை மட்டைகளில் கட்டி விட வேண்டும்.
காா்சைரா என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் விட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ரசாயன பூச்சி கொல்லி மருந்தைப் பயன்படுத்தக் கூடாது.
இந்த ஒருங்கிணைந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றாா் ஜஸ்டின்.
அப்போது, வேளாண் உதவி இயக்குநா்கள் ஆா். சாருமதி (தரக்கட்டுப்பாடு), ஐயம்பெருமாள் (தஞ்சாவூா்) உடனிருந்தனா்.