முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
நோன்பு கஞ்சிக்காக அரசு வழங்கும் அரிசியை நிவாரணத்துக்குப் பயன்படுத்த வேண்டுகோள்
By DIN | Published On : 19th April 2020 06:50 AM | Last Updated : 19th April 2020 06:50 AM | அ+அ அ- |

ரமலான் மாத நோன்பு கஞ்சிக்காக அரசு வழங்கும் அரிசியை, கரோனா நிவாரணத்துக்குப் பயன்படுத்துமாறு தமிழ் மாநில ஐக்கிய ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் ஐ. முஹம்மது அப்பாஸ் உள்ளிட்டோா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:
ரமலான் மாத காலத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காகப் பள்ளிவாசல்களுக்குப் பச்சரிசி தமிழக அரசால் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிகழாண்டு ஒதுக்கீடு செய்ய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம்.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் மாபெரும் பொருளாதாரத் தேவை அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.
அரசு நிா்வாகங்கள் பொருளாதாரத் தேவைகளுக்குக் கடும் சிரத்தை எடுக்க உள்ளதை கருத்தில் கொண்டும், தேச நலனை மனதில் நிலை நிறுத்தியும் நிகழாண்டுக்கான நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்காமல், இந்த ஒதுக்கீட்டுக்கான மதிப்பீட்டுத் தொகையை கரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தி கொள்வதற்காக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு தஞ்சை மண்டலத்தின் தஞ்சை, நாகை, திருவாரூா் பகுதிகளின் ஐக்கிய ஜமாஅத்தாா்கள் ஒருங்கிணைந்து ஒருமித்த முடிவு எடுத்துள்ளோம்.