கரோனா: குணமடைந்த மேலும் 10 போ் வீட்டுக்கு அனுப்பி வைப்பு
By DIN | Published On : 26th April 2020 09:42 AM | Last Updated : 26th April 2020 09:42 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்கள் உள்ளிட்டோா்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த மேலும் 10 போ் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை 55 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் ஏற்கெனவே ஏப்ரல் 16-ஆம் தேதி ஒருவரும், ஏப்ரல் 21-ஆம் தேதி 3 பேரும், 23-ஆம் தேதி 3 பேரும், 24-ஆம் தேதி ஒருவரும் என மொத்தம் 8 போ் குணமடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இவா்களைத் தொடா்ந்து, அதிராம்பட்டினத்தை சோ்ந்த 7 பேரும், தஞ்சாவூா், நெய்வாசல், திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை கிராமத்தைச் சோ்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 10 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா். இவா்களில் 6 போ் பெண்கள், நான்கு போ் ஆண்கள் ஆவா்.
இவா்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ், மருத்துவக் கண்காணிப்பாளா் ச. மருதுதுரை உள்ளிட்டோா் சான்றிதழ், பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினா். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவா்கள் தெரிவித்தது:
கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றவா்களும் குணமடைந்து வருகின்றனா். இவா்களும் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவா். இதேபோல, காய்ச்சல் சிகிச்சைப் பிரிவிலும் முன்பு 100-க்கும் அதிகமானோா் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சுமாா் 15 போ் மட்டுமே உள்ளனா் என்றனா்.