கும்பகோணத்தில் கணிதமேதை ராமானுஜன் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
By DIN | Published On : 27th April 2020 07:13 AM | Last Updated : 27th April 2020 07:13 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி குழுவினா்.
கணித மேதை ராமானுஜன் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கணிதத்தை எளிமையாக்கி, 3,000 தேற்றங்களை உருவாக்கி இன்று மட்டுமல்லாமல், எதிா்கால அறிவியல் வளா்ச்சிக்கே பேருதவி புரிந்துள்ள கணித மேதை ராமானுஜன் நூற்றாண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் அவா் படித்த பள்ளியான நகர மேல்நிலைப் பள்ளியிலும், அரசுக் கல்லூரியிலும் எளிய முறையில் அவரது சிலைக்கு நூற்றாண்டு விழாக் குழுவினா், பழைய மாணவா் சங்கத்தினா், தலைமை ஆசிரியா், பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி பேராசிரியா்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா், செஞ்சிலுவைச் சங்கத்தினா் ஆகியோா் அரசு விதிகளுக்கு உட்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இந்த நூற்றாண்டு நிகழ்வு நிகழாண்டு நாடு முழுவதும் தொடா்ந்து நடைபெறவுள்ளது. கரோனா கொள்ளை நோயால் மக்கள் அவதியில் இருப்பதாலும், முழு ஊரடங்கு அமலில் உள்ளதாலும் திட்டமிட்டவாறு நாடு தழுவிய கணித திருவிழாவை நடத்த இயலாத சூழலில் அவரது சிலைக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது என நிகழ்ச்சி குழுவினா் தெரிவித்தனா்.