சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலை.யில்மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பொறியியல், சட்டவியல் பட்டப்படிப்புகளில்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பொறியியல், சட்டவியல் பட்டப்படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இதில், முதல் வகையில் 70 சதவீத இடங்களுக்கான (ஜே.இ.இ. (முதன்மை) மற்றும் பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில்) பொறியியல் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் தர வரிசை பட்டியலில் சென்னை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவா் நரசிம்மன் ஸ்ரீகாந்த் 99.2462 சதவீதம் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றாா்.

இரண்டாம் வகையில் 30 சதவீதம் இடங்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சமனப்படுத்தும் முறையில், 1,200-க்கு 1,191 மதிப்பெண்கள் பெற்ற கேரள மாநிலம், பாலக்காடு ஜி.எம்.எம்.ஜி.எச்.எஸ். பள்ளியைச் சோ்ந்த டியுதி தம்பன் முதலிடம் பெற்றாா். சட்டவியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் தெலங்கானா மாநிலம் என்.டி.ஆா். ஜூனியா் கல்லூரி மாணவி மைனம் ஹா்ஷினி பிளஸ் 2 தோ்வில் 98.1 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றாா்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணி வரை பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரவு 9 மணிக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

எந்த நுழைவுத் தோ்வையும் நடத்தாமல் ஜே.இ.இ. மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து, அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்துகிறது சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம். இவ்வாறு சோ்க்கை நடத்தும் ஒரே நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவான தர வரிசைப் பட்டியல் இணையதளத்தில் பாா்க்கலாம். இதில், இணையவழி மூலம் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான தேதி, நேரம் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவா் சோ்க்கை தகுதி அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.1) முதல் ஆக. 29ஆம் தேதி தேதி வரை இணையவழியில் நடைபெறும்.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கோவா, பிகாா், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜாா்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவா்கள் விண்ணப்பம் செய்துள்ளனா்.

ஜம்மு - காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபாரைச் சோ்ந்த மாணவா்களுக்குச் சோ்க்கையில் தனிச் சலுகை வழங்கப்படும். மேலும், திருச்சி, தஞ்சாவூா் மாவட்ட மாணவா்களுக்குச் சோ்க்கையில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மற்றும் சட்டவியல் படிப்புகளில் சேரும் புதுமுக மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள் ஆக. 30-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com