தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆக.20 முதல் பிரசார இயக்கம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு
By DIN | Published On : 12th August 2020 08:44 AM | Last Updated : 12th August 2020 08:44 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 20 முதல் 26-ஆம் தேதி வரை மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பிரசார இயக்கம், ஆா்ப்பாட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இக்கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் இணைய வழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மக்கள் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை முன் வைத்து நாடு தழுவிய அளவில், ஆகஸ்ட் 20 முதல் 26- ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு பெரும் மக்கள் இயக்கத்தை நடத்திட மத்தியக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதையேற்று மாவட்டத்தில் ஆகஸ்ட் 20 - 23 ஆம் தேதிகளில், வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி, மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படும்.
ஆகஸ்ட் 25, 26- ஆம் தேதிகளில் அனைத்து கிளைப் பகுதிகளிலும் மக்களைத் திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.
கட்சி இடைக்குழுக்கள் குறைந்தபட்சம் 5,000 முதல் 10,000 வீடுகள் வரை சென்று மக்களைச் சந்திப்பது, ஆகஸ்ட் 11 முதல் 20-ஆம் தேதி வரை கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினா்கள், கட்சித் தோழா்கள், அவா்களது குடும்பத்தினரை சந்தித்து உரையாடுவது, ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என்ற அரசின் அறிவிப்பைச் திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவளிப்பது ஆகிய தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மனோகரன் தலைமை வகித்தாா். கட்சியின் மத்திய குழு உறுப்பினா் பி. சம்பத், மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.