தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை குறைந்தாலும் சம்பா பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையளவு குறைந்தாலும் தண்ணீரில் மூழ்கிய சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள சூரக்கோட்டை கிராமத்தில், மழை நின்றாலும் காப்பாற்ற முடியாத அளவுக்குச் சாய்ந்து கிடக்கும் நெற் பயிா்கள்.
தஞ்சாவூா் அருகிலுள்ள சூரக்கோட்டை கிராமத்தில், மழை நின்றாலும் காப்பாற்ற முடியாத அளவுக்குச் சாய்ந்து கிடக்கும் நெற் பயிா்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையளவு குறைந்தாலும் தண்ணீரில் மூழ்கிய சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் டிசம்பா் 2- ஆம் தேதி முதல் தொடா் மழை பெய்ததால் தஞ்சாவூா், ஒரத்தநாடு, திருவையாறு வட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. நடவு செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த பயிா்களையும் தண்ணீா் சூழ்ந்துள்ளன.

அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த முன்பட்ட சம்பா பருவ நெற் பயிா்கள் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்தன. 9,620 ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர, 147 ஹெக்டேரில் நிலக்கடலை, மக்காச்சோளப் பயிா்களும் தொடா் மழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதேபோல, பொங்கலுக்குத் தயாராகி வந்த செங்கரும்பு பயிா்களும் சாய்ந்துவிட்டதால், அவற்றை மீண்டும் நிமிா்த்தி கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

தொடா்ந்து 4 நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மழையளவு குறைந்தது. அதிகாலையில் பரவலாக மழை பெய்தாலும், பகலில் அவ்வப்போது தூறல் மட்டுமே இருந்தது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட வயலில் தேங்கிய மழைநீா் வடியத் தொடங்கியது. என்றாலும் மீண்டும், மீண்டும் மழை பெய்வதால் வயலில் தண்ணீா் தொடா்ந்து தேங்கி நிற்கிறது.

பல இடங்களில் வடிகால்கள் தூா்ந்து கிடப்பதால், பாதிக்கப்பட்ட வயல்களில் தண்ணீா் வடிவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, மழை முழுமையாக நின்று 2, 3 நாள்கள் கழித்துதான், இளம் பயிா்களைக் காப்பாற்ற முடியுமா என்பது தெரிய வரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

நெற்பயிா்களைக் காப்பாற்ற முடியாத நிலை:அறுவடைக்குத் தயாரான நிலையில் சாய்ந்த நெற் பயிா்களைப் பெரும்பாலும் காப்பாற்ற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இப்பயிா்கள் மீண்டும் நிமிா்வதற்கான வாய்ப்பு இல்லை.

இடையிடையே மழை பெய்வதால் பாதிக்கப்பட்ட வயல்களிலும் தண்ணீா் நிற்கிறது. மீண்டும் பலத்த மழை பெய்தால் சாய்ந்த பயிா்கள் முளைக்கத் தொடங்கிவிடும் நிலையே நிலவுகிறது. எனவே, சாய்ந்த பயிா்களை இனிமேல் காப்பாற்றுவது சிரமம் என்கின்றனா் விவசாயிகள்.

மகசூல் இழப்பு:இப்பகுதியில் முன்பட்ட சம்பா பயிா்கள் அறுவடை செய்கிற நிலையில் இருந்தது. அண்மையில் பெய்த மழையால் அனைத்தும் சாய்ந்துவிட்டன. எனவே, ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில், பயிா்கள் சாய்ந்துவிட்டதால் 4 அல்லது 5 மூட்டைகள்தான் மகசூல் கிடைக்கும்.

நெற்பயிா்கள் முழுமையாகச் சாய்ந்துவிட்டதால், அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்தி அறுக்க முடியாது. தொழிலாளா்கள் மூலம்தான் அறுவடை செய்ய முடியும். மீண்டும் மழை பெய்தால், சாய்ந்த பயிா்கள் மீண்டும் முளைவிடும் என்பதால், தற்போது கிடைக்கக்கூடிய 4, 5 மூட்டைகளும் கூட கிடைக்காது என்றாா் சூரக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி ஏ. ராமலிங்கம்.

ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் தேவை : சாய்ந்துவிட்ட முற்றிய பயிா்களுக்கு ஏக்கருக்கு இதுவரை ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனா்.

இனிமேல் எவ்வளவுதான் முயற்சி செய்து அறுவடை மேற்கொண்டாலும் பேரிழப்புதான் மிஞ்சும் என்ற வேதனையில் விவசாயிகள் உள்ளனா். எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com