முதல்வர் வேட்பாளரை தேசிய தலைமை அறிவிக்கும்: எல்.முருகன்  

முதல்வர் வேட்பாளரை தேசிய தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.
எல்.முருகன்.
எல்.முருகன்.

முதல்வர் வேட்பாளரை தேசிய தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் தெரிவித்தது: தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கலின்போது நமது முதல்வரும் சென்றார். இது, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறை. இப்போது, அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளனர். 

அதற்கு எங்களுடைய தேசிய தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றே நான் கூறி வருகிறேன். அதை இப்போதும் கூறுகிறேன். முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. சிலர் ஏதோ நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். அது நடக்காது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என அறிவித்தனர். 

இது, எங்களது தேசிய முன்னாள் தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இருந்த மேடையில் அறிவிக்கப்பட்டது. இதை அமித் ஷா முறைப்படி மேலிடத்துக்குச் சொல்வார். அங்கிருந்து அறிவிப்பு வரும். தமிழகத்தில் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது. இக்கூட்டணியின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எங்களது கூட்டணி வலுவாக உள்ளது. 

இக்கூட்டணிதான் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சியினர் உட்கார்ந்து பேசுவர். அப்போது பாஜகவுக்கு எத்தனை சீட் என்பது குறித்து நிச்சயமாக முடிவு எடுக்கப்படும். பாஜகவுக்கு ஏ, பி, சி டீம் என எதுவும் தேவை கிடையாது. பாஜக ஒரே டீம்தான். அதிமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. 

நாங்களும் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக வெற்றிவேல் யாத்திரை நடத்தி மக்களைச் சந்தித்தோம். இப்போது, ஆயிரம் இடங்களில் கூட்டங்களை நடத்தி விவசாயிகளைச் சந்தித்து வருகிறோம். எங்களது அகில இந்திய தலைமை கூறிய பிறகு தேர்தல் பிரசாரத்தை முறையாகத் தொடங்குவோம். ஏழைகள், சிறு விவசாயிகள் உள்ளிட்டோருக்காக பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைக்கு ரூ. 2,500 வீதம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முருகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com