உள்ளாட்சி வரிகளை ரத்து செய்ய வணிகா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 25th December 2020 08:14 AM | Last Updated : 25th December 2020 08:14 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத்தால் வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உள்ளாட்சி வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் இக்கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
நிகழாண்டு முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் தொழில் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 6 மாத காலம் முழுப் பொது முடக்கத்தால் வருமானம் முற்றிலும் தடைப்பட்டது. இக்காலகட்டத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவன தொழிலாளா்களுக்கு பிடித்தம் இன்றி ஊதியம் மற்றும் நிவாரணங்கள் வணிகா்களால் வழங்கப்பட்டுள்ளது. தொழில் வணிகத்துக்காக வங்கி மற்றும் தனியாா்களிடம் பெறப்பட்ட கடன் மற்றும் அதற்கான வட்டி பெரும் சுமையாக உள்ளது.
எனவே, தமிழக அரசுப் பேரிடா் கால வணிக முடக்கம் மற்றும் வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு சொத்துவரி, தொழில் வரி, குப்பை வரி போன்ற உள்ளாட்சி வரிகள் அனைத்தையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த வணிகா்களுக்கு, தொழில் முனைவோா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் சோழா சி. மகேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் வி. சத்தியநாராயணன், சங்க நிா்வாகிகள் ரவிச்சந்திரன், மனோகரன், மாணிக்கவாசகம், கியாசுதீன், ரமேஷ், வேதம் முரளி, அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.