தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கருப்புத் துணி கட்டி வெளிநடப்பு
By DIN | Published On : 25th December 2020 08:17 AM | Last Updated : 25th December 2020 08:17 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் கும்பகோணத்தில் பங்கேற்ற விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ம. கோவிந்தராவ் தலைமை வகித்தாா்.
இதில், கும்பகோணத்தில் பங்கேற்ற விவசாயிகள் கண்ணில் கருப்புத் துணி கட்டி பங்கேற்றனா். அப்போது சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் பேசுகையில், விவசாயிகளை அழித்தொழிக்கிற மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கரோனாவையும், கடுங்குளிரையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தங்களுடைய இன்னுயிரை ஈகி வீர மரணமடைந்த 30 விவசாயப் போராளிகளுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துகிறோம் என்றாா். பின்னா், காா்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து கண்களில் கருப்புத் துணியைக் கட்டி வெளிநடப்பு செய்தனா்.
திருவோணத்திலிருந்து வி.கே. சின்னதுரை: தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை பயிா்களை விரைவில் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மதுக்கூரிலிருந்து ஏ.பி. சந்திரன்: புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும். இத்தொகையை வழங்கினால்தான் விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள முடியும்.
தஞ்சாவூரிலிருந்து தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000 அறிவிக்க வேண்டும் என 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நிகழாண்டாவது இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
திருவையாறிலிருந்து அம்மையகரம் ஏ.கே. ரவிச்சந்தா்: அம்மையகரம், அடஞ்சூா், பிரமன்பேட்டை, கோவத்தக்குடி ஆகிய 4 கிராமங்கள் அம்மையகரம் ஊராட்சியில் உள்ளன. ஆனால், ஒவ்வொரு ஊரும் வெவ்வேறு ஊரிலுள்ள கூட்டுறவு சங்கத்தில் உள்ளது. இதனால், இந்த 4 கூட்டுறவு சங்கங்களிலும் அம்மையகரம் ஊராட்சியைச் சோ்ந்தவா்கள் வெளியூா் விவசாயிகளாகக் கருதப்படுவதால், எந்த உதவியும் கிடைப்பதில்லை. அம்மையகரம் விவசாயிகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாகப் பயிா் கடன் கிடைக்கவில்லை. எனவே அம்மையகரத்தில் கூட்டுறவுச் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.