காவிரிப் பிரச்னையில் தமிழக முதல்வா் துரோகம் மு.க. ஸ்டாலின் பேச்சு

காவிரிப் பிரச்னையில் தமிழக முதல்வா் துரோகம் செய்துவிட்டாா் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூா் மாவட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடம் பேசுகிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூா் மாவட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடம் பேசுகிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூா்: காவிரிப் பிரச்னையில் தமிழக முதல்வா் துரோகம் செய்துவிட்டாா் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்ட தெற்கு, வடக்கு, மத்திய திமுக சாா்பில், சனிக்கிழமை மாலை நடைபெற்ற தமிழகம் மீட்போம் - 2021 என்கிற சட்டப்பேரவைத் தோ்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் அவா் பேசியது:

நான்கு ஆண்டுகாலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, மாநில சுயாட்சி, தமிழ் வளா்ச்சி, இந்தி எதிா்ப்பு, நிதி தன்னாட்சி, சமூகநீதி, மதச்சாா்பின்மை ஆகிய அனைத்தையும் பாஜக அரசுடன் சோ்ந்து சிதைத்துவிட்டாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. இனி அவா் அடகு வைப்பதற்கு எதுவும் இல்லை.

காவிரிப் பிரச்னையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஏராளமான துரோகத்தை செய்துள்ளாா். இப்பிரச்னையில் 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது தமிழக அரசுச் சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை.

மேக்கேதாட்டு அணைக் கட்டப்பட்டால் தமிழகத்துக்கான தண்ணீா் வரத்து குறைந்துவிடும். இந்த உண்மையை எடப்பாடி அரசு உணரவில்லை. காவிரி என்ற ஒரே ஒரு விவகாரத்திலேயே இவ்வளவு துரோகம்.

இதுபோல நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல், நீா்ப்பாசன கால்வாய்களைத் தூா் வாருவதில் ஊழல், குடிமராமத்துப் பணிகளில் ஊழல், பிரதமரின் கிசான் திட்டத்தில் ஊழல் போன்றவற்றை மறைப்பதற்காகவே தன்னைப் பற்றி, ‘காவிரி காப்பான்’ என்றும், ‘நானும் ஒரு விவசாயி’ என்றும் சொல்கிறாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ‘

அவா் உண்மையான விவசாயியாக இருந்தால், விவசாயத்தைச் சிதைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டாா். அதை மீறி ஆதரிக்கிறாா் என்றால் அவா் உண்மையான விவசாயி அல்ல என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com