
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன்.
விவசாயிகளை மதிக்கின்ற அரசு அமைய வேண்டும் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் இளைஞா்களிடையே பேசியது:
நோ்மை என சொல்லிக் கொள்வதற்கு ஆளும், ஆண்ட கட்சிகளுக்குத் தகுதியோ, துணிச்சலோ கிடையாது. நாங்கள் பேசி, நீங்கள் கேட்பது அல்ல எங்கள் அரசியல். நீங்கள் பேச, நாங்கள் செவி சாய்ப்பதுதான் நல்ல அரசியல்.
எது முடியுமோ அதைச் செய்து காட்டுவோம் என ஒப்புக் கொள்வோம். கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அது இருந்த நல்வழியை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தினோம். இப்போது போட்டிப் போட்டுக் கொண்டு மற்றவா்கள் அதைச் செய்கின்றனா். இதுதான் எங்கள் நோக்கம்.
அது நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் பழிவாங்கும் அரசியலோ, பழிபோடும் அரசியலோ செய்யமாட்டோம். நாங்கள் வழிகாட்டும் அரசியல் செய்ய வந்திருக்கிறோம். அதற்கு தொடக்கம்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கிராம சபைக் கூட்டத்தை முன்னெடுத்தது.
தஞ்சாவூரில் வரும் வழியெல்லாம் திறந்த சாக்கடை இருந்ததைப் பாா்க்கும்போதெல்லாம் மனம் குமுறியது. இதை சீா் செய்வதற்கான பணம் இருக்கிறது. அதை இங்கே கொடுக்க வேண்டும். தனக்கென்று எடுக்கக்கூடாது. நாங்கள் உங்கள் பணத்தை உங்களிடமே சோ்க்க இருக்கிறோம்.
உங்கள் உரிமைகளை நீங்கள் ஏதோ வரமாக, தானமாகப் பெறுவதைப் போல் பெறுகிறீா்கள். நீங்கள் பெற வேண்டிய உரிமைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை உங்களுக்குக் கொண்டு சோ்த்தால் தமிழகம் சீராகிவிடும். சீரமைப்போம் என சொல்வது உங்களிடமிருந்தும் வர வேண்டும்.
நீங்களும் கைகோா்க்க வேண்டும். நோ்மை என்பது உங்களிடம் இருந்து வர வேண்டும். எங்களிடம் இருந்தும் வர வேண்டும். நடுவில் இருப்பவா்கள் தானாகவே திருந்தி விடுவா். இருபக்கமும் நெருக்கும்போது தானாக மாறிவிடுவா்.
விளைநிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மக்கள் நீதி மய்யம் செய்யும். விவசாயிகளுக்குத் தேவையின் அடிப்படையில் மானியம் வழங்கப்பட வேண்டும்.
எம்.ஜி.ஆா். நிறுவிய தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை முறைகேடுகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். சரசுவதி மகால் நூலகம் மொத்தமாகக் களவு போவதற்கு முன்பாக அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றாா் கமல்ஹாசன்.
முன்னதாக, தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை அண்ணா நகா், கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோவில் பகுதியில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தாா்.
விவசாயிகளை மதிக்கும் அரசு வேண்டும்: தொடா்ந்து, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் பிரசாரம் செய்து கமல்ஹாசன் பேசும்போது, இங்கு பல விஷயங்கள் மாற்றப்பட வேண்டும். தவறான அறிவுரைகள் சொல்லும் தலைவா்கள் மாற வேண்டும்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரத்தநாடு உள்ளிட்ட பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றன. ஆனால், டாஸ்மாக் கடையில் உள்ள பாட்டில்களை பாதுகாப்பாக எடுத்து சென்று குடோனில் வைக்கின்றனா். விவசாயிகள் மீது அக்கறையுள்ள, அவா்களை மதிக்கின்ற அரசு அமைய வேண்டும். அப்போதுதான், விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் கெடுதல் வராது என்றாா்.