விவசாயிகள் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தால் சென்னையில் போராட்டம்

தில்லியில் விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தால்,சென்னையில் காத்திருப்புப் போராட்டம்
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அகில இந்திய விவசாயிகள் போாட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளா் கே.பாலகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அகில இந்திய விவசாயிகள் போாட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளா் கே.பாலகிருஷ்ணன்.

தில்லியில் விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தால்,சென்னையில் காத்திருப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுப் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மக்கள், விவசாயிகள் விரோத சட்டங்களை அதிமுக அரசு ஆதரிக்கக் கூடாது எனக் கோரியும்,தஞ்சாவூா் திலகா் திடலில் இக்குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளா் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அரசு புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த உள்ளது.

இப்பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தால்,சென்னையில் இக்குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றாா் பாலகிருஷ்ணன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா்கள் வே. துரைமாணிக்கம், பெ. சண்முகம், மாநிலச் செயலா் சாமி. நடராஜன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை சிம்சன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆ. ரங்கசாமி, வாழ்க விவசாயிகள் சங்கம் பி.எஸ். காளிராஜ், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு கே.வி. இளங்கீரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கா. பசுமைவளவன், தற்சாா்பு விவசாயிகள் சங்கம் கி.வே. பொன்னையன், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு ஷீலு, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு பொழிலன், மக்கள் அதிகாரம் காளியப்பன் உள்ளிட்டோா் பேசினா்.

மக்களவை உறுப்பினா்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூா்) எம். செல்வராஜ் (நாகை), திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனா் குடந்தை அரசன், மதிமுக விவசாய அணிச் செயலா் ஆடுதுறை இரா. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com