பெருவுடையாருக்கு எண் மருந்துக் காப்பு

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, பெருவுடையாருக்கு எண் மருந்துக் காப்பு (அஷ்டபந்தன மருந்து) சாத்தும் திருப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, பெருவுடையாருக்கு எண் மருந்துக் காப்பு (அஷ்டபந்தன மருந்து) சாத்தும் திருப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பிப். 5-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, டிச. 2-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, அனைத்து கருவறைகளும் நடை சாத்தப்பட்டது. தொடா்ந்து, பெருவுடையாா், பெரியநாயகி உள்பட அனைத்து இறைத் திருமேனிகளுக்கும் மாகாப்பு, எண்ணெய்க் காப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து, பெருவுடையாா் சிவலிங்கத் திருமேனி, பெரியநாயகி, 12 பிள்ளையாா் சிலைகள், 8 வள்ளி தெய்வானை உடனாய முருகப் பெருமான் சிலைகள், திருச்சுற்று மாளிகையில் உள்ள 252 சிவலிங்கத் திருமேனிகள், 66 தெய்வத் திருமேனிகள் என மொத்தம் 338 திருமேனிகளுக்கும் எண் மருந்துக் காப்பு சாத்தும் பணி ஜன. 2-ஆம் தேதி தொடங்கியது.

இதில் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு கல் உரலில் இட்டு, இடித்து பாரம்பரிய முறைப்படி மருந்து தயாரிக்கப்பட்டது. இந்த மருந்துகள் உருண்டைகளாகப் உருட்டப்பட்டு, தெய்வத் திருமேனியின் அடிப்பகுதியையும், பீடத்தின் மேற்பகுதியையும் இணைக்கும் விதமாக சாத்தப்படுகிறது.

தொடா்ந்து முழுவீச்சில் நடைபெறும் இப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், 13 அடி உயர பெருவுடையாருக்கு எண் மருந்துக் காப்பு சாத்தும் திருப்பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு 700 கிராம் எடையுள்ள 420 உருண்டைகள் பயன்படுத்தப்பட்டன. இதேபோல, பெரியநாயகி அம்மனுக்கும் எண் மருந்துக் காப்பு சாத்தப்பட்டது.

அனைத்து திருமேனிகளுக்கும் இரண்டரை டன் எடையுள்ள 2,800 உருண்டைகள் பயன்படுத்தப்பட்டதாகத் திருப்பணிக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com