மீட்டெடுக்கப்பட்ட சோழர் கால ஓவியங்கள்
By DIN | Published On : 05th February 2020 05:55 AM | Last Updated : 05th February 2020 05:55 AM | அ+அ அ- |

பெரியகோயில் சாந்தார நாழியில் மீட்டெடுக்கப்பட்ட சோழர் கால ஓவியங்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையைப் பயன்படுத்தி வண்ணக் கலவையைத் தயாரித்து அழியாத ஓவியங்களைத் தீட்டுவதில் வல்லவர்களாக இருந்தனர். இதற்கு ஓர் ஆதாரமாக இருப்பது தஞ்சை பெரியகோயிலில் சோழர் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்களே.
இந்த ஓவியங்களுக்காகக் கோயிலிலேயே மிகவும் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்துள்ளான் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த அரிய பெட்டகத்தை என்றுமே பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதே அவனது சிறந்த நோக்கமாக இருந்தது.
கோயில் கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரநாழி என்ற சுற்றுப் பாதையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. கோயில் கோபுரத்தைத் தாங்கி நிற்கும் இரு பெரிய சுவர்களுக்கு இடையே, குறுகிய அளவில் இந்தப் பாதையை அமைத்துள்ளனர். இப்பாதை 6 அடி அகலமுடையது.
இந்த ஓவியங்கள் மிகப்பெரிய தடைகளைத் தாண்டி இன்று நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த ஓவியங்களை மீட்டெடுக்க அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கே. கோவிந்தசாமி பணியாற்றினார். இவர் சோழர்கால கலைகளில் ஆர்வமுடையவர். அப்போது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜோவா டுப்ரெய்ல் என்பவர் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலில் மறைந்து கிடந்த பல்லவர் கால ஓவியங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வெளி உலகத்துக்குக் காண்பித்து பெரும் புகழ் பெற்றார்.
இது, எஸ்.கே. கோவிந்தசாமிக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது. இதேபோல, சோழர்கால ஓவியங்களும் எங்கேயாவது மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டுபிடித்து வெளி உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனை அவரது மனதில் உதித்தது.
இதற்காக அவர், தஞ்சைப் பெரிய கோயிலுக்கு 1931 ஆம் ஆண்டு வந்தார். கோயில் முழுவதும் ஓவியங்களைத் தேடினார். ஆனால், அக்கோயிலில் சோழர் கால ஓவியம் எங்குமே கிடைக்கவில்லை. பின்னர் அவர் 6 அடி அகலம் கொண்ட சாந்தார நாழியில் இருளடைந்து கிடந்த இடத்தில் சிறிய எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். அப்போது, அந்த அறையின் இரண்டு சுவரிலும் மங்கலான ஓவியங்கள் இருப்பதைக் கண்டார். ஆனால், அந்த ஓவியங்கள் அவர் எதிர்பார்த்த பழங்கால ஓவியங்களாக இல்லை. அவை, நவீனகால ஓவியங்களாக இருந்தன.
இதனால், சற்று மனம் தளர்ந்த அவர் சிதம்பரத்துக்குச் சென்றார். மீண்டும் தஞ்சை பெரியகோயிலுக்கு வந்த அவர் பெட்ரோமாக்ஸ் விளக்கு உதவியுடன் பார்த்தபோது, சுவரில் நாயக்கர் கால ஓவியங்களே இருந்தன. இவை விஜயராகவ நாயக்கர் காலத்தில் தீட்டப்பட்டவை.
தொடர்ந்து சுவரில் இருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த கோவிந்தசாமிக்கு ஓர் ஓவியத்தில் சுண்ணாம்பு பூச்சு பெயர்ந்திருந்தது தெரிந்தது. அதில், கோவிந்தசாமி லேசாக கை வைத்து பார்த்தார். அந்த ஓவியத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. அப்போது, ஓவியம் பெயர்ந்திருந்த இடத்தின் உள்ளே மற்றொரு ஓவியம் மறைந்து கிடப்பது தெரிய வந்தது. அது சோழர் கால ஓவியம் என்பதை உறுதி செய்தார் கோவிந்தசாமி.
மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் அந்தச் சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததையும், பின்னர் ஆட்சிக்கு வந்த நாயக்கர்கள் அந்த ஓவியங்களின் மீது சுண்ணாம்பு பூச்சு தடவி, அதில் தங்களது ஓவியங்களை வரைந்துள்ளதையும் கோவிந்தசாமி கண்டறிந்தார். இதையறிந்த இந்திய தொல்லியல் துறையினர் அக்கோயிலுக்கு வந்தனர். இதேபோல, சுவரின் மற்ற பகுதிகளிலும் நாயக்கர்களின் ஓவியங்களுக்கு பின்னே சோழர்களின் ஓவியங்கள் மறைந்து கிடக்கலாம் என்ற கருத்து உருவானது.
இதையடுத்து, நாயக்கர்களின் ஓவியங்களுக்கு அடியில் இருக்கும் சோழர் கால ஓவியங்களை எந்தவித சேதாரமும் இல்லாமல் வெளியே கொண்டு வருவது குறித்து திட்டமிடப்பட்டது.
இதன்படி, சுவரில் இருந்த நாயக்கர் கால ஓவியங்களைத் தொல்லியல் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக அகற்றினர். அப்போது, அவற்றின் அடியில் இருந்த சோழர் கால ஓவியங்கள் ஒவ்வொன்றாகத் தெரிய வந்தன.
பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டதாலும், நாயக்கர்களின் ஓவியங்களின் அழுத்தம் காரணமாகவும் உள்ளே இருந்த சோழர் கால ஓவியங்கள் ஓரளவு சேதாரத்துடன் காணப்பட்டன. என்றாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் அற்புதமான வண்ணங்களில் தோய்த்து எழுதிய ஓவியங்கள் தெளிவாகவே இருந்தன. இந்த ஓவியங்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் புகைப்படமாக எடுக்கப்பட்டன. என்றாலும், மூன்றில் ஒரு பங்கு ஓவியங்களே இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
சுந்தரர் வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியத் தொகுப்பு, சுந்தரரும், சேரமானாரும் நீள் விசும்பிடை கயிலை செல்வது, கயிலையில் ஞான உலா பாடுவது, தில்லைக்கோயிலில் ராஜராஜனும், தேவியரும், தில்லையில் சேரர் கலை, திரிபுராந்தகர் ஓவியக் காட்சி, தஞ்சை கோயிலில் வழிபடும் ராஜராஜன் உள்ளிட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், மாமன்னன் ராஜராஜசோழன் மிகச் சிறந்த கலாரசிகன் என்பது தெரிய வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...