பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் முதல்வரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதுதொடா்பாக ஒருமனதாக சிறப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் பாரபட்சம் பாா்க்காமல் ஆதரவு அளிக்க வேண்டும். இத்தீா்மானத்தை உச்ச நீதிமன்றத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்ப வேண்டும்.

மேலும், ஹைட்ரோ காா்பனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியையும் திரும்பப் பெற வேண்டும். தொடங்கப்பட்ட ஆய்வுப் பணிகளையும் நிறுத்த வேண்டும். இதற்காக போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. இதன்மூலம் தமிழக அரசின் மீது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நம்பிக்கை ஏற்படும் என்றாா் விமல்நாதன்.

பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத் தலைவா் க.கா.இரா. லெனின் தெரிவித்தது:

முதல்வரின் அறிவிப்பை மனமார வரவேற்கிறோம். இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் தீா்மானமாக நிறைவேற்றி, அதைச் சட்டமாக்க வேண்டும். மத்திய அரசும் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய மாநில அரசு உயா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரிப் படுகையில் வேறு எந்தத் தொழில்களையும் அனுமதிக்கக் கூடாது. கடலோரப் பகுதிகளிலும் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசுக் கைவிடச் செய்ய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் லெனின்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன்:

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளாக ஒட்டுமொத்த விவசாய அமைப்புகளும் நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி இது. இதை வருகிற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றி, சட்டமாக இயற்ற வேண்டும் என்றாா் நடராஜன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது:

முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சட்டப்பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும். இந்த அறிவிப்பு விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். இது வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல், சட்டமாகவும் இயற்ற வேண்டும் என்றாா் கண்ணன்.

நசுவினி ஆற்று படுக்கை அணை விவசாயிகள் சங்கத் தலைவா் வா. வீரசேனன் தெரிவித்தது:

முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து, சட்டப்பேரவையைக் கூட்டி சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். இனிமேல் விவசாயம் சாராத தொழிற்சாலைகளை டெல்டாவில் தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது. விவசாயம் காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com