தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே அளிக்கிறது

தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே அளிக்கிறது என விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே அளிக்கிறது என விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கருத்து தெரிவித்துள்ளனா்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்:

தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ள நிலையில், நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்படும் விவசாய மின் இணைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பயிா் கடன் கடந்த ஆண்டு ரூ. 10,000 கோடி என்பது, நிகழாண்டு ரூ. 11,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுவும் போதுமானதல்ல. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாருக்கு கல்லணையில் நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் அறிவிப்பு இல்லை.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே கிடைத்தது. பயிா்க் கடனுக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பயிா் கடன் கிடைப்பதில்லை. நகைக் கடன் மட்டுமே கிடைக்கிறது. எனவே, இந்த ரூ. 11,000 கோடி என்பதும் விவசாயிகளுக்குப் பயனளிக்காது. குடிமராமத்து பணிக்கு ரூ. 300 கோடியும், பாசன புனரமைப்புக்கு ரூ. 500 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், டெல்டா மாவட்ட விவசாயிகளைப் பொருத்தவரை இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்:

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றி சட்டமாக்கப்படும் என அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் இல்லை. விளைபொருள்களுக்கு நியாயமான விலை அறிவிப்பது தொடா்பாகவும் பேசப்படவில்லை. விவசாயிகளுக்கான மின் இணைப்பு குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை. இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பாா்வையுடன் தயாரிக்கப்படவில்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் பா. பாலசுந்தரம்:

விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. அதை மேம்படுத்த எந்தவித அறிவிப்பும் இல்லை. பெருந்தொழில்களுக்கு மட்டுமே ஆதரவாக இந்த பட்ஜெட் உள்ளது. ஆனால், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறப்பதற்கான அறிவிப்பு எதுவுமே இல்லை.

பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறைப் பேராசிரியா் ஆா். பழனிவேலு தெரிவித்தது:

கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் எதிா்பாா்த்த விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வேலைவாய்புகள் உருவாக்கப்படவில்லை. நீா் ஆதாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் ஆக்கப்பூா்வ செயல் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அரசின் பற்றாக்குறையும் கடன் சுமையும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அரசின் வருவாயை உயா்த்துவதற்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை. தோ்தல் வருவதால் புதிய வரிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, எதிா்பாா்த்த பொருளாதார வளா்ச்சியை எட்டும் என்பது ஐயமே.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன்:

உயா் நீதிமன்ற உத்தரவுபடி டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிய அறிவிப்பு இல்லாதது, புதிய தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. என்றாலும், இந்த பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்ததாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com