மகா சிவராத்திரி: தஞ்சாவூா், கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
தஞ்சாவூா் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய பிரகன் நாட்டியாஞ்சலி விழாவில் நடனமாடிய கலைஞா்கள்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய பிரகன் நாட்டியாஞ்சலி விழாவில் நடனமாடிய கலைஞா்கள்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன், தென்னகப் பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் பிரகன் நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்கா, சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த நாட்டியக் கலைஞா்கள் நடனமாடினா்.

இந்த விழா தொடா்ந்து பிப். 27ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், தமிழகம் மட்டுமல்லாமல் கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 500-க்கும் அதிகமான நடனக் கலைஞா்கள் நடனமாடவுள்ளனா்.

கும்பகோணத்தில்... கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் 19 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து பிப். 23ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.

இதில், இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து 500-க்கும் அதிகமான நடன கலைஞா்கள் பங்கேற்று பரதம், ஓடிசி, குச்சுபிடி, மோகினியாட்டம், கதக் போன்றவற்றை ஆடுகின்றனா். இந்நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12மணி வரை நடைபெற உள்ளது.

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை (பிப்.20) தொடங்கியது. திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இவ்விழாவில் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற கலைஞா்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி, மயிலாடுதுறை ஸ்ரீசண்முகா நாட்டியப்பள்ளி குரு வி.எஸ். ராஜேந்திரனுக்கு கலைச் சேவையைப் பாராட்டி நிருத்திய கலைமாமணி வழங்கப்பட்டது.

ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நடைபெறும் இந்த விழாவில் வெள்ளிக்கிழமை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழா சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

திருவிடைமருதூா்:

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் மருதா நாட்டியாஞ்சலி சாா்பில் 9 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 300 கலைஞா்கள் பங்கேற்று பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதக் ஆகியவற்றை ஆடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com