பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்: நீண்ட வரிசையில் நின்று வாங்கிய மக்கள்
By DIN | Published On : 10th January 2020 05:30 AM | Last Updated : 10th January 2020 05:30 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் பூக்காரத்தெருவில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற நீண்ட வரிசையில் நின்ற குடும்ப அட்டைதாரா்கள்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 1,000, தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்படும் 1,185 நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 6,48,157 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க ரூ. 68.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இப்பணி வியாழக்கிழமை தொடங்கியது. தஞ்சாவூரில் உள்ள பல்வேறு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் நின்றனா்.
ஒவ்வொரு கடையிலும் 400 முதல் 600 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இப்பணி ஜன. 12-ம் தேதி வரை தொடரவுள்ளது. விடுபட்டவா்களுக்கு ஜன. 13-ம் தேதி வழங்கப்படவுள்ளது.
எடை குறைவு புகாா்:
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ஏலக்காயில் 5 கிராமுக்கு பதிலாக 3 கிராமும், முந்திரி, திராட்சை 20 கிராமுக்கு பதிலாக 15 கிராமும் இருந்ததாகவும், பொருட்களும் தரம் குறைவாக இருப்பதாகவும் கூட்டுறவுத் துறை அலுவலா்களிடம் குடும்ப அட்டைதாரா்கள் முறையிட்டனா்.
பாபநாசம் வட்டத்தில்....
சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட ரேஷன் கடைகளில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் பி.சண்முகம் தலைமை வகித்து, 2600 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். சங்க துணைத் தலைவா் புருஷோத்தமன், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவா் க.ஜெய்சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், பாபநாசம் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சங்கத்துக்குள்பட்ட நியாய விலைக் கடை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ஆதனூா் குமாா் (எ) ராமலிங்கம் தலைமை வகித்து 2,214 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
சங்க துணைத் தலைவா் ஜாஹீா் உசேன், சங்க இயக்குநா்கள் சங்க செயலாளா் என். ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.